திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 12ஆம் தேதி அதிகாலை தொடர்ந்து 4 ஏடிஎம் இயந்திரங்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து 72 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில் கொள்ளையர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். அதன் பேரில் கர்நாடகா, ஆந்திரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோர் அரியானா மாநிலத்தில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு திருவண்ணாமலை அழைத்து வரப்பட்டனர். இவர்கள் இருவரையும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி கவியரசன் முன்னிலையில் ஆஜர் படுத்தியதை அடுத்து நீதிபதி அவர்களை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கொள்ளையர்கள் இருவருக்கும் பண பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக இருந்ததாக கடந்த மாதம் 21ஆம் தேதி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குதரத்பாஷா மற்றும் தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்து தந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்சர் உசேன் ஆகிய இருவரையும் திருவண்ணாமலை போலீசார் கைது செய்து அழைத்து வந்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 




 


கொள்ளையர்கள் இருவருக்கும் 14 நாள் நீதிமன்ற காவலில் இருக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில்  கொள்ளையடிக்க பயன்படுத்திய டாட்டா சுமோ காரை திருப்பதியில் இருந்து திருடி வந்து கொள்ளையர்களுக்கு உதவிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிஜாமுதீனை போலீசார் கடந்த 5- ஆம் தேதி கைது செய்ததுடன் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா சுமோ காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கொள்ளையனை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர்.  நிஜாமுதீனுக்கு வருகின்ற 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருக்க  நீதிபதி உத்தரவிட்ட நிலையில் போலீசார் நிஜாமுதீனை பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 14.03.2023 அன்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிராஜுதீன் என்பவரை கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாடு போலீசார் கைது செய்ததுடன் கொள்ளைக்கு பயன்படுத்திய கன்டெய்னர் லாரியையும் நேற்று பறிமுதல் செய்தனர். 


 




அதனைத் தொடர்ந்து இன்று 7வது நபராக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த வாகித் என்பவரை ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழ்நாடு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி கவியரசன் முன்பு ஆசர்படுத்தப்பட்ட  வாகித்திற்கு வருகின்ற 29ஆம் தேதி வரை (14 நாட்கள்) நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் குறித்து காவல்துறையினர் தனிப்படைகள் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர் என திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தகவல் தெரிவித்தார்.


நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.