விழுப்புரத்தை சேர்ந்த நகை வியாபாரியிடம் நூதன முறையில் கவரிங் நகை கொடுத்து 15 லட்சத்து 67 ஆயிரம் மோசடி செய்த நபரை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.


விழுப்புரம் அருகே உள்ள கொண்டங்கி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 31), நகை வியாபாரி. இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ஆரோக்கியநாதன் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சக்திவேலையும், இவருடைய நண்பரான பசுபதி என்பவரையும் விழுப்புரத்தில் அறந்தாங்கியை சேர்ந்த சாந்தி மீனா (40), ஆரோக்கியநாதன் ஆகிய இருவரும் சந்தித்து பேசினர். அப்போது சாந்திமீனா, தன்னுடைய 73 பவுன் நகை, அடகு கடையில் இருப்பதாகவும், அந்த நகைக்கு உரிய அடமான தொகையான ரூ.15 லட்சத்து 67 ஆயிரத்தை கொடுத்துவிட்டு நகையை பெற்றுக்கொள்ளுமாறு பசுபதியிடம் கூறினார்.


இதை நம்பிய பசுபதி, சக்திவேலின் மற்றொரு நண்பரான ஜெயசக்தியிடம் இதுபற்றி கூறினார். பின்னர் சக்திவேல் தனது நண்பர்கள் பசுபதி, ஜெயசக்தி ஆகியோருடன் ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு காரைக்குடிக்கு சென்று சாந்திமீனாவை சந்தித்தனர். அப்போது சாந்திமீனா, அடகு கடைக்கு சென்று பேசிவிட்டு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்பதை அறிந்து, அதுபற்றி சொன்ன பிறகு பணத்தை கொண்டு வாருங்கள் என்றும், அதுவரை ஆரோக்கியநாதன் இங்கேயே இருப்பார் என்று அவர்களிடம் கூறிவிட்டு சென்றார்.


பின்னர் சக்திவேலை தொடர்பு கொண்ட சாந்திமீனா, ரூ.15 லட்சத்து 67 ஆயிரம் தேவைப்படுவதாக கூறியதால் சக்திவேல், விழுப்புரத்தில் உள்ள தனது நண்பர் அசோக்கை தொடர்புகொண்டு மீதமுள்ள தொகையான ரூ.5 லட்சத்து 67 ஆயிரத்தை அனுப்ப சொன்னார். அதன்பேரில் அசோக், ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக சாந்திமீனா கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக அனுப்பியுள்ளார். அதன் பின்னர் சாந்திமீனா, சக்திவேலை தொடர்புகொண்டு ஸ்ரீராம் நகர் பகுதிக்கு வரச்சொன்னார்.


அதன்படி அங்கு வந்த சக்திவேலிடம் ரகசிய நெம்பர் லாக் உள்ள ஒரு நகை பெட்டியை கொடுத்துவிட்டு அவரிடமிருந்த ரூ.10 லட்சத்தை பெற்றுக்கொண்டு 10 நிமிடங்களில் வருவதாக கூறி ஆரோக்கியநாதனை சாந்திமீனா அழைத்துச்சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர்கள் இருவரும் அங்கு வரவில்லை. பின்னர் அந்த நகை பெட்டியை சக்திவேல் உடைத்து பார்த்தபோது அந்த பெட்டியில் கவரிங் நகைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியநாதனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சாந்திமீனாவை தேடி வருகின்றனர்.