மினி நிறுவனத்தின் புதிய கூப்பர் மின்சார காரின் வேரியண்ட் லிமிடெட் எடிஷனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


மினியின் மின்சார கார்:


பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு சொந்தமான, இங்கிலாந்தை சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மினி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கணிசமான பங்களிப்பை கொண்டுள்ளது. நேர்த்தியான மற்றும் காண்போரை கவரும் விதமான இந்த நிறுவனத்தின், கூப்பர் உள்ளிட்ட கார் மாடல்களின் வடிவமைப்பு உலகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனிடையே, மினி நிறுவனம் முதன் முதலில் அறிமுகம் செய்த மினி SE மாடல் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த கார் கடந்த ஆண்டில் மட்டும் உலகளவில் 43 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகின. இந்நிலையில் தான்,  மினி நிறுவனத்தின் ஆல்-எலெக்ட்ரிக் கூப்பர் SE மாடலின் சார்ஜ்ட் எடிஷன் வேரியன்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


லிமிடெட் எடிஷன்:


மினி நிறுவனத்தின் ஆல்-எலெக்ட்ரிக் கூப்பர் SE மாடலின் சார்ஜ்ட் எடிஷன் வேரியன்ட், லிமிடெட் எடிஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் உருவாக்கப்பட்டுள்ள கார்கள் வெறும் 20 எண்ணிக்கையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த காரின் விலை ஸ்டேண்டர்ட் மாடலை காட்டிலும், ரூ.1.5 லட்சம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கம்ப்ளீட் பில்டட் யூனிட் என்ற வகையில் உருவாகி உள்ள இந்த காரின் விலை 55 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இன்ஜின் விவரங்கள்:


மினி கூப்பர் SE சார்ஜ்ட் எடிஷன் மாடலில் உள்ள மோட்டார் 184 ஹெச்பி பவர், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் எனும் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள 32.6 கிலோவாட் ஹவர் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும். அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சார்ஜிங் அம்சங்கள்:


50kW DC ஃபாஸ்ட் சார்ஜர் வழியாக இந்த பேட்டரியை 36 நிமிடங்களில் 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்யும் என மினி நிறுவனம் தெரிவித்துள்ளது. 11kW வால்பாக்ஸ் சார்ஜருடன்  Cooper SE ஆனது 2 மணிநேரம் மற்றும் 30 நிமிடங்களில் 0-80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யப்படலாம்.  2.3kW சார்ஜரைப் பயன்படுத்தினால் 9 மணிநேரம் 43 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடிவமைப்பு விவரங்கள்:


காரின் உட்புற மற்றும் வெளிப்புற அம்சங்கள் எந்த மாற்றமும் செய்யப்படாமல், ஸ்டேண்டர்ட் வெர்ஷனில் உள்ள வடிவமைப்பே பின்பற்றப்பட்டுள்ளது.  இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் லிமிடெட் எடிஷன் கூப்பர் SE மாடல்- சார்ஜ்டு எடிஷன் சில்லி ரெட் நிறம் மற்றும் டூயல்-டோன் ரூஃப் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த காரின் கூரை வெள்ளை  நிறத்திலும், வட்டவடிவம் கொண்ட முகப்பு விளக்கு, டெயில் லைட் ரிங்குகள், டோர் ஹேன்டில்கள், லோகோ மற்றும் டெயில்கேட் ஹேன்டில் உள்ளிட்டவைகளை சுற்றி வெள்ளை நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. 8.8-இன்ச் தொடுதிரை மற்றும் 5.5-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் க்ளஸ்டர் ஆகியவற்றுடன், உட்புறம் முழுக்க கருப்பு நிறம் இடம்பெற்றுள்ளது.


யாருக்கு போட்டி?


கூப்பர் SE சந்தையில் எந்த நேரடி போட்டியாளர்களும் இன்றி தனித்துவமாக அமைந்துள்ளது.  விலையைப் பொறுத்தவரை  ஹூண்டாய் ஐயோனிக் 5 (ரூ. 44.95 லட்சம்), வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (ரூ. 56.90 லட்சம்) மற்றும் கியா ஈவி6 (ரூ. 60.95 லட்சம்-65.95 லட்சம்) ஆகியவற்றுக்கு போட்டியாக அமைந்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI