Crime :  வேறு பெண்ணை காதலன் நேசித்த சோகத்தில் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், கோதாவரி தெருவைச் சேர்ந்தவர் மாலினி. இவரது மகள் கவிதா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கு அதே கல்லூரியில் படித்து வந்த சக மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளைடைவில் அது காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.  


இந்நிலையில் சமீப காலமாக கவிதாவுடன் சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கவிதாவிடம் பேசுவதை  காதலன் தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி காதலனிடம் கேட்ட கவிதா, வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் நாம் இருவருக்கும் பொதுவாக செட் ஆகாது என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் கவிதா அவரிடம் சண்டை போட்டுள்ளார். அதனை அவர் பொருட்படுத்தாமல்  அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.


இதனால் மனவேதனையில் இருந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதிகரிக்கும் தற்கொலைகள்


2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 18,295 தற்கொலைகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இருக்கும் 36 மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு முன் முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அங்கு 22,207 தற்கொலைகள் பதிவாகி இருக்கிறது.


இந்திய அளவில் பதிவான தற்கொலைகளில் 11.5 சதவீதம் தற்கொலைகள் தமிழ்நாட்டில் தான் இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பதிவான தற்கொலைகளில் 8,073 குடும்ப பிரச்சனைகளினால் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. குடும்ப பிரச்சனைகளால் தற்கொலை செய்வேரில் தமிழ்நாடு மக்களே அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் உடல்சார்ந்த பிரச்சனைகளால் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)