சென்னை, அண்ணாநகரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் (பிப்.15) இரவு, தனது வீட்டின் கதவை பூட்ட மறந்து திறந்துவைத்தபடியே தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் இதனைக் கவனித்து திடீரென பெண்ணின் வீட்டுக்குள் இளைஞர் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து அப்பெண் கூச்சலிட்ட நிலையில், பயந்துபோன இளைஞர் தப்பி ஓடத் தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து உடனடியாக இதுகுறித்து, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பெண் கொடுத்த தகவலின்பேரில் அண்ணாநகர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியிருந்த இளைஞரை காவல் துறையினர் மடக்கிபிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் முகப்பேர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 25) என்பதும், அந்நபர் மீது ஏற்கெனவே திருமங்கலம், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதி காவல் நிலையங்களில் திருட்டு அடிதடி உள்பட சுமார் எட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
மேலும், இரவு நேரங்களில் பலரை மிரட்டி செல்ஃபோன் பறித்துள்ள இந்நபர், அவற்றை மலிவு விலையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சுப்பிரமணி மீது வழக்கு பதிந்து அவரை காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் முன்னதாக திண்டிவனம் அருகே ஆட்டோவில் இரவு நேரத்தில் தனியாக சென்ற பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த ஆட்டோ டிரைவர் மீது ஏற்கெனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள 28 வயதான பெண் பிப்ரவ்ரி 12ஆம் தேதி தனது கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி நல்லாளம் கூட்டு சாலையில் திண்டிவனம் செல்ல பேருந்திற்காக நின்றிருந்தார். அங்கு வந்த பெருமுக்கல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகன் மகன் சுகன்ராஜ் தான் திண்டிவனம் சவாரி செல்வதாகவும், அங்கு சென்று அந்தப் பெண்ணை விட்டுவிடுவதாகவும் கூறி ஆட்டோவில் ஏறுமாறு கூறியதால் அதனை நம்பி அந்தப் பெண்மணியும் ஆட்டோவில் ஏறி உள்ளார். இதனைப் பயன்படுத்தி ஆட்டோ டிரைவர் சுகன்ராஜ் பெருமுக்கல் மலைக்குச் செல்லும் மண் பாதையை ஒட்டிய முட்புதரில் அந்தப் பெண்மணியை கீழே இறக்கி பாலியல் அத்துமீறலில் முயன்றுள்ளார்.
உடனே அந்த பெண்மணி ஆட்டோ டிரைவரை அடித்து விட்டு அங்கிருந்து தப்பிய நிலையில் கணவருக்கு தகவல் அளித்ததின் பேரில் அங்கு வந்த பெண்ணின் கணவர் அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஆட்டோ டிரைவர் சுகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். சுகன்ராஜ் மீது ஏற்கெனவே பிரம்மதேசம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.