Crime: பெண் கொடுக்க மறுத்த ஆத்திரத்தில், இளைஞர் ஒருவர் இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்
வட மாநிலங்களில் சத் பூஜை மிகவும் கோலகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பூஜை வட மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பீகார் மாநிலம் லோகிசராய் அருகே பஞ்சாப் மொஹல்லா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆசிஷ் கௌத்ரி. இவர் தனது வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.
இதனால், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்காக, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். ஆனால், அவருக்கு தங்களது பெண்ணை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று கூறியிருக்கின்றனர். இதனால் ஆசிஷ், பெண்ணின் குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் சத் பூஜைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் முன்பு வந்த ஆசிஷ், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக அவர்களை நோக்கி சுட்டுள்ளார். இதனார், அவர்கள் அங்குமிங்கும் ஓடியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர், அங்கிருந்து ஆசிஷ், துப்பாக்கியை போட்விட்டு தப்பி ஓடியுள்ளார்.
2 பேர் உயிரிழப்பு:
துப்பாக்கி சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், படுகாயம் அடைந்தவர்கள் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தது சந்தன், ராஜ் நந்தன் என தெரியவந்தது. ஆசிஷ் திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண் உட்பட நான்கு பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். லவ்லி குமாரி, ப்ரீத்தி குமார், துர்கா குமார் மற்றும் சஷி குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தச் சம்பவம் பஞ்சாபி மொஹல்லாவில் நடந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சாத்காட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆஷிஷ் சவுத்ரி என்ற நபர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆஷிஷ் சவுத்ரி பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என தெரிவித்தார்.