திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி, திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு ஏடிஎம் மையங்களில், கேஸ் கட்டிங்கை பயன்படுத்தி 72 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 9 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, அவர்கள் கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஆரிஃப், ஆசாத், குதரத் பாஷா, அப்சர் உசேன் மற்றும் நிஜாமுதீன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு கார்கள் ஆகியவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.


 




அதனைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல் துறையினர், கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிராஜுதின் என்பவரை கர்நாடக மாநில எல்லை அருகே தனிப்படை போலீசார், கடந்த மார்ச் மாதம் கைது செய்து கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்திய கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு பேரை கைது செய்த தனிப்படை போலீசார், முக்கிய குற்றவாளியைத் தேடும் பணியில் இறங்கினர், அப்போது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிராமிய ஆய்வாளர் புகழ் தலைமையில் 6 உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஹரியானா மாநிலத்தில் முகாமிட்டிருந்தனர். அப்போது, இந்த வழக்கின் முக்கிய முதல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆசிப்ஜாவேத் என்பவர் ஹரியானா மாநிலத்தின் ஆரவல்லி மலைப் பகுதிக்கு இடையே இருக்கும் பாழடைந்த கட்டடத்தில் மறைந்திருப்பதாக தனிப்படை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், ஒரு வாரம் முகாமிட்டு தீவிர முயற்சிக்கு பின் ஆசிப்ஜாவேத் துப்பாக்கி முனையில் தனிப்படை காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடமிருந்த 15 லட்சம் ரூபாய் மற்றும் 2 கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.


அதனைத் தொடர்ந்து, ஹரியானா மாநிலம் மேவாத் மாவட்டம், பாதஸ் கிராமத்தைச் சேர்ந்த ஆசிப்ஜாவேத் என்பவர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கீ.கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், பிடிபட்ட ஆசிப்ஜாவேத் என்ற நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.