Crime: டெல்லியில் அமேசான் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணியாற்றி வந்தவரை 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சுட்டுக்கொலை:
டெல்லி அமேசான் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் ஹர்ப்ரீத் கில் (36). இவர் நேற்று இரவு 11.30 மணியளவில் உணவகம் நடத்தும் தனது நண்பர் கோவிந்த் சிங் (32) என்பவருடன் சுபாஷ் விஹார் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, குறுகிய சாலையில் இருபுறமும் அதிவேகத்தில் இரண்டு இருசக்கர வாகனத்தில் 5 பேர் கொண்ட கும்பல் வந்தது.
ஹர்ப்ரீத் கில் வண்டியை நெருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவரை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் சுட்டத்தில் ஹர்ப்ரித் கில் பின்பு அமர்ந்திருந்த அவரது நண்பர் மீதும் குண்டு பாய்ந்து.
ரத்த வெள்ளம்:
பின்னர், இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஹர்ப்ரீத் கில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இவரின் நண்பர் கோவிந்த் சிங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் இரவு 11.30 மணிக்கு நடந்ததுள்ளது. துப்பாக்கி தோட்டா கில்லின் வலது பக்க காதுக்கு பின்புறம் பாய்ந்து மறு முனையில் வெளியே வந்ததுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில், தனது தாய், தந்தையிடம் வீட்டை விட்டு செல்லும்போது 10 நிமிடங்களில் வந்துவிடுவதாக கில் தெரிவித்த நிலையில், அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கும்பல்:
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்தது 5 பேர் கொண்ட கும்பல். இந்த கும்பல் டான் ஆக வேண்டும் என்ற ஆசையில் இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுகின்றனர். இந்த 5 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 19 வயதுடைய சமீர் என்றும் இவர் பல வீடியோக்களில் துப்பாக்கிகளுடன் காணப்படுவதாகவும்" போலீசார் தெரிவித்தனர்.