நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ளது குறிச்சிகுளம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன் (வயது 27 ). இவர் வெளியூரில் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்த நிலையில்  நேற்று குறிச்சிகுளம் பகுதியில்  நெல்லையில் இருந்து மதுரை செல்லும் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.  அப்போது அவரை திடீரெனெ வழிமறித்த மர்ம  நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெள்ளையப்பனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை துண்டிக்கப்பட்டு இரத்த  வெள்ளத்தில் கீழே சரிந்த நிலையில் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். மதிய வேளையில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்த ஊர் மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த  தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து உயிரிழந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. அதில் வெள்ளையப்பன் அதே பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக  மாறியுள்ளது.  பின் இருவரும் அடிக்கடி பழகி வந்துள்ளனர். இதனை இளம்பெண்ணின் கணவர் கண்டித்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த இளம்பெண்ணை தன்னுடன் வெளியூர் அழைத்து சென்றதாக  தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம் பெண்ணின் உறவினர்கள் இக்கொலையை திட்டமிட்டு செய்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக இக்கொலையில் விளாகத்தை சேர்ந்த மணிகண்டன் (22), நாகராஜன் (20), கரையிருப்பை சேர்ந்த மூக்கன், தமிழ்செல்வன் (19), பாண்டி(22), சிதம்பரம் நகரை சேர்ந்த பேச்சிராஜா(23), மற்றும் செல்வ கணபதி (23) ஆகியோர் ஈடுபட்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  திருமணமான பெண்ணுடன் தவறான உறவு வைத்திருந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.