வேலூர் ஆற்காடு சாலை காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 18 வயது முதல் 21 வயது உடைய இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இளம் சிறார் ஒருவரை சென்னையில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்ற சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் மார்ச் 25-ஆம் தேதி முயற்சி செய்தனர். அப்போது பாதுகாப்பு இல்ல கட்டிட சுவர் மீது ஏறிய இளம் சிறார் கீழே இறங்காமல் சுமார் மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக அட்டகாசம் செய்தார். இந்த சம்பவம் குறித்து வேலூர் இளஞ்சிரார் நீதிமன்ற குழும நீதிபதி பத்மகுமாரிக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உடனே பாதுகாப்பு இல்லத்திற்கு நேரில் வந்து இளஞ்சிறாரிடம் இளஞ்சிறார் நீதிமன்ற குழும நீதிபதி பத்மகுமாரி பேச்சுவார்த்தை நடத்தியதினார். அதன் பிறகு இளஞ்சிறார் கீழே இறங்கி வந்தார்.
இந்த நிலையில் மார்ச் 27-ஆம் தேதி அன்று சுவரின் மீது ஏறி அட்டகாசம் செய்த இளம் சிறார் மற்றும் அவரது கூட்டாளிகள் என 6 பேர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். தப்பி ஓடிய போது பாதுகாப்பு இல்ல ஊழியர்கள் மூன்று பேரை தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வேலூர் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் சுமார் 50-க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக வேலூர் கோட்டாட்சியர் கவிதா தலைமையிலான வருவாய் துறையினரும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் விசாரணை நடத்தினர். அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து இளம் சிறார்கள் ஆறு பேர் தப்பி ஓடிய சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட சிறார் கைதிகளின் விவரங்கள் கடலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைக்கு வேலூர் மாவட்ட காவல்துறையினர் அனுப்பி வைத்து உடனடியாக வாகன தணிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. 24 மணி நேரத்திற்குள் தப்பி ஓடிய சிறார் கைதிகளை பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.