தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது வடக்கு கிடாரங்குளம். இக்கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர் பொக்லைன் இயந்திர டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கு ஒன்றில் மணிகண்டன் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கிடாரங்குளம் பாலத்திற்கு அருகே வந்து கொண்டிருந்த போது அவரது இருசக்கர வாகனத்தை மறித்த மர்மகும்பல் அவரை வெட்டியது. அப்போது பைக்கை போட்டு விட்டு இறங்கி ஓடிய மணிகண்டனை துரத்திய அந்த கும்பல் அங்குள்ள கடை அருகே அவரை சரமாரியாக வெட்டி வீழ்த்தியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடி இறந்தார். பின் இந்த செயலில் ஈடுபட்ட மர்மகும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
தகவலறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின் உயிரிழந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலிசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நாச்சியார்புரம் விலக்கு காட்டுப்பகுதியில் கிடாரங்குளம் நெட்டூரைச் சேர்ந்த ஆடு திருடும் ஒரு கும்பலுக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மணிகண்டன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசி தென்காசி நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அதில் ஆஜராஜி விட்டு மணிகண்டன் வீடு திரும்பிய நிலையில் இக்கொலை சம்பவம் நடந்துள்ளது. எனவே அந்த கும்பல் பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் இது தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வரும் நிலையில் தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அக்கிராம பகுதியில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீடு திரும்பிய இளைஞரை மர்ம கும்பல் வெட்டி வீழ்த்திய சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்