Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?

அண்ணி சுதாவை செல்வராஜ் அடிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் தேங்காய் உரிக்கும் கடப்பாறையால் செல்வராஜை குத்திவிட்டு ரேவதியை தாக்கியுள்ளார்.

Continues below advertisement

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அடுத்த இனாம் பைரோஜி மாமரத்துகாடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி ரேவதி. இவர்களது வீட்டிற்கு அருகிலேயே செல்வராஜின் சகோதரர் சிவஞானம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் குடியிருந்து வரும் பூர்வீக குடும்ப நிலம் தொடர்பாக செல்வராஜ் மற்றும் சிவஞானம் ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த சிவஞானம் அருகில் இருந்த தேங்காய் உரிக்கும் கடப்பாரையால் செல்வராஜின் நெஞ்சில் குத்தினார். 

Continues below advertisement

இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார். அதே சமயம் இருவரின் சண்டையை தடுக்க வந்த ரேவதியை தலையில் சிவஞானத்தின் மனைவி சுதா கடப்பாறையால் தாக்கினார். இதில் ரேவதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள் செல்வராஜ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் காயமடைந்து கிடந்த ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சடலமாக கிடந்த செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைதொடர்ந்து சம்பவம் தொடர்பாக சிவஞானம் மற்றும் அவரது மனைவி சுதா ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் முன்விரோத தகராறில் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. செல்வராஜுக்கு சிவஞானம், தங்கதுரை, பூமிநாதன் ஆகிய மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளன. இவர்களுக்கு சொந்தமாக ஆறு சென்ட் வீட்டு நிலமும், 40 சென்ட் விவசாய நிலமும் உள்ளது. இதில் பூமிநாதன் உயிரிழந்த நிலையில் சகோதரிகள் இருவருக்குமான பாகங்கள் ஏற்கனவே பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டது. தற்போது மீதமுள்ள மனையை பிரிப்பதில் சகோதரர்கள் மூன்று பேருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனிடையே கடந்த 15 ஆம் தேதி செல்வராஜ் தனது வீட்டின் முன் பகுதியில் கூரை போட முயன்றுள்ளார். அப்போது சிவஞானத்துடன் வழிதடப் பிரச்சினை ஏற்பட்டது. தொடர்ந்து 16 ஆம் தேதி இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அண்ணி சுதாவை செல்வராஜ் அடிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவஞானம் தேங்காய் உரிக்கும் கடப்பாறையால் செல்வராஜை குத்திவிட்டு ரேவதியை தாக்கியுள்ளார். இதற்கு அவரது மனைவி சுதா உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கணவன் மனைவி இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பூர்வீக நில தகராறில் சகோதரரே கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola