வணங்கான்
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் வணங்கான். பாலாவின் தயரிப்பு நிறுவனமான 'பி ஸ்டுடியோஸ் ' மற்றும் சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
சேது படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 25 ஆண்டுகளாக பயணித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பாலா காட்டிய கதையுலகமும் கதாபாத்திரங்களும் எடுத்துக்காட்டாக திகழ்பவை. பாலாவின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாகவும் வணங்கான் படத்தின் இசை வெளியீடும் சேர்ந்து சென்னை நந்தம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் , சூர்யா , சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். நடிகர் சிவகுமார் பாலாவிற்கு தங்க செயினை அணிவித்தார். சூர்யா பாலா பற்றி உணர்வுப்பூர்வமாக பல தகவல்களை பரிமாறிக் கொண்டார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது அமரன் படத்திற்கு பாலா இன்ஸ்பிரேஷனாக இருந்ததாக தெரிவித்தார்.
இயக்குநர் பாலா பற்றி சிவகார்த்திகேயன்
" தீபாவளியின் போது வெளியாகும் படங்களில் நெகட்டிவ் க்ளைமேக்ஸ் இருந்தால் அந்த படம் ஓடாது என்கிற நம்பிக்கை இருக்கிறது. இதனால் அமரன் பட க்ளைமேக்ஸ் பற்றி நான் நிறைய யோசித்தேன் . அப்போது தான் தெரிந்தது பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படத்தில் நெகட்டிவ் க்ளைமேக்ஸ் இருந்தது .அந்த படம் தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அது எனக்கு பெரிய உந்துதலாக இருந்தது. " என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.