திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதி எப்போதும் பரபரப்பாக பொதுமக்கள் நடமாட்டத்துடன் காணப்படும்,இந்நிலையில் காவலர்கள் வாகன தணிக்கையில் இந்த பகுதியில்  ஈடுபடுவதும் வழக்கம், இதனை தொடர்ந்து மூஞ்சிக்கல் பகுதியில் இன்று மாலை வேளையில் வழக்கம் போல் மகளிர் காவலர்கள் இருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்,அப்போது மூஞ்சிக்கல் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் இல்லாமல் அதிவேகமாக இளைஞர் ஒருவர்  வந்துள்ளார்,அப்போது மகளிர் காவலர்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்,அப்போது குடிபோதையில் இருந்த இளைஞரை குடி போதையில் வாகனம்  ஓட்டக் கூடாது என எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகின்றது,

அதனை தொடர்ந்து அங்கிருந்த மகளிர் காவலர்கள் வேறு பகுதிக்கு வாகன தணிக்கைக்கு செல்லும் போது,அவர்களை பின் தொடர்ந்த அந்த இளைஞர் மகளிர் காவலர்கள்  சென்ற இரு சக்கர வாகனத்தினை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகளால் பேசி வாக்கு வாதம் செய்துள்ளார். இதனை காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்குமாறு எச்சரித்தும்,எனது பெயர் சையது இப்ராகிம் என்றும்,நான் கொடைக்கானல் அன்னை தெரசா நகர் பகுதியில் வசிக்கிறேன் என்றும் சினிமா பாணியில் வசனம் பேசி சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த மகளிர் காவலர்கள் கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  இது குறித்து தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் முதன்மை காவலர்களான சின்னசாமி(49) சீனிவாசன் (45) ஆகிய  இருவர் அன்னை தெரசா நகர் பகுதியில் உள்ள சையது இப்ராகிம் வீட்டிற்கு சென்று அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்,

காவல் நிலையத்திற்கு அழைத்து வரும் வழியில் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியினை எடுத்து சின்னசாமி என்ற காவலரை  தலையின் பின் பகுதியிலும்,சீனிவாசன் என்ற காவலரை  கையில் வெட்டியும் கண் இமைக்கும் நொடியில் தப்பியுள்ளார்,காயம் அடைந்த  தலைமை காவலர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக வந்து சிகிச்சை பெற்றனர்,இதில் சின்னசாமி என்பவருக்கு தலையில் 15 தையலும்,சீனிவாசன் என்பவருக்கு கையில்  2 தையலும் போடப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் தப்பியோடிய இளைஞரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் கொடைக்கானல் வத்தலகுண்டு  பிரதான மலைச்சாலை நுழைவு வாயில் காமக்காப்பட்டி சோதனை சாவடியில்  சுற்றுலா வாகனம் இண்டிகாவை அங்கிருந்த காவலர்கள் சோதனை செய்யும் போது வாகனத்தில்  மறைந்து இருந்த சையது இப்ராகிம் வாகனத்தில் இருந்து  இறங்கி  காவலர்களை தள்ளி விட்டு மீண்டும் தப்பி ஓடியுள்ளார்,

இதனை பார்த்த 3 காவலர்கள் சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி சையது இப்ராகிமை  வளைத்து பிடித்தனர். மேலும் வாகனத்தில்  இருந்த சையது இப்ராகிம் மனைவி சஞ்சனா(25) காவலர்களை தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது, இந்த இருவரையும் சுமார் அரைமணி நேரமாக போராடி பிடித்த  காமக்கா பட்டி சோதனை சாவடி காவலர்கள்  சோதனை சாவடியில் பாதுகாப்பாக வைத்திருந்தனர், தகவல் அறிந்து விரைந்த வந்த திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் விசாரணை செய்தனர்,அதன்  பின்னர் கணவன்,மனைவி இருவரையும் பட்டிவீரன் பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் ,

இதனையடுத்து கொடைக்கானலுக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து காயம் அடைந்த இரு தலைமை காவலர்களை நேரில் நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்து சென்றார். சையது இப்ராகிம் இது போன்று ஏற்கனவே காவலரை தாக்கி குண்டாஸ் வழக்கு, உள்ளிட்ட பல் வேறு வழக்குகள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது , மேலும் குடிபோதையில் இருந்த இளைஞர் மகளிர் காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசியதும்,தலைமை  காவலர்களை கத்தியால் குத்தியதும்  பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.