சென்னை கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொடுங்கையூர் ஆர்.ஆர் நகர் பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வந்து செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் கொடுங்கையூர் போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த தேவி வயது 25 என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கணவர் ஆகாஷ் 30 என்பவரை தேடி வந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டார். கணவன் மனைவி இருவரும் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. ஹோம் டெலிவரி செய்தால் சிக்கி விடும் என்கிற காரணத்தால், ஹோமிற்கே வர வைத்து டெலிவெரி செய்ததும் அம்பலமானது.
கஞ்சா விற்பனையில் அத்தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ,இந்த தம்பதி கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்து தங்கள் தொழிலை டெவலப் செய்ய முயன்றனர். டோர்வெலிவரி ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால், ‛சந்தோஷமா வாங்க... பொட்டலத்தோடு போங்க...’ என வீட்டிலேயே விற்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் தான் வீட்டில் தொடங்கிய கஞ்சா விற்பனை, களைகட்டத் தொடங்கியுள்ளது.
ஆந்திரா கஞ்சா... அருமையான சரக்கு என்றெல்லாம் வெளியில் விளம்பரம்படுத்தி ‛ஒர்க் ப்ரம் ஹோம்’ செய்து வந்த தம்பதி, தற்போது ‛ஒர்க் ப்ரம் ஜெயில்’ சென்றுள்ளனர். ஆம் கைது செய்யப்பட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இன்றயை முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்