சென்னை மாதாவரத்தில் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச்செலுத்தவில்லை எனக்கூறி வங்கி அதிகாரிகள் சீல் வைத்ததால் மனமுடைந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கந்துவட்டியில் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆனால் சென்னையில் நிகழ்ந்துள்ள சம்பவம் சற்று வித்தியாசமானது என்று தான் கூற வேண்டும். கந்துவட்டிக்காரர் வட்டிக்கு பணம் கொடுக்கும் போது கையெழுத்திட்டு வாங்கிய பத்திரத்தை வங்கியில் வைத்துக் கடன் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் பஜார் தெருவைச்சேர்ந்தவர் 64 வயதான கஜபதி. இவர் தனது மனைவி சண்முக சுந்தரி மற்றும் தன்னுடைய தாய் நவநீதம்மாளுடன் வசித்துவந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு யாருக்கும் தெரியாமல் வித்யா என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றார் நவநீதம்மாள். அப்போது தன்னுடைய வீட்டை அடமானம் வைப்பது போல் கடன் கொடுத்த ஒரு பத்திரத்தில் நவநீதம்மாளிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணம் கொடுத்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக கடனைத்திருப்பி செலுத்தி வந்த நிலையிலும் கடன் கொடுத்த வித்யா, கஜபதியின் வீட்டுப்பத்திரத்தை நவநீதம்மாளுக்கு தெரியாமல் தாட்கோ வங்கியில் வைத்து ரூபாய் 9.5 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தான் கடந்த 2009 ஆம் ஆண்டு இதுப்பற்றி தெரிந்துக்கொண்ட கஜபதி, தன் தாயை ஏமாற்றி கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதோடு, வங்கியிலும் கடன் பெற்றுள்ளார் என வித்யா மீது மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தாார். இதனையடுத்து வழக்கை விசாரித்த போலீசார், வித்யா மீது மோசடி வழக்குப்பதிவு செய்ததோடு, கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் வீத்யா வீட்டுப்பத்திரத்தை வாங்கி வங்கியில் வாங்கிய கடனுக்கான அசல் மற்றும் வட்டியைச் செலுத்தாமல் இருந்தமையால், வங்கி நிர்வாகம் நவநீதம்மாளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார் கஜபதி.
இதனையடுத்து தான் வங்கி அதிகாரிகள் நேற்று முன்தினம் கஜபதிக்கு சொந்தமான கடை மற்றும் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இதனால் மனமுடைந்த கஜபதி நேற்று காலை தீடிரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த மாதவரம் காவல்நிலைய போலீசார் தற்கொலை செய்து கொண்ட கஜபதியின் உடலைக் கைப்பற்றியதோடு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால் அதற்கு முன்னதாக உயிரிழந்த கஜபதியின் உறவினர்கள், ஏற்கனவே வங்கியில் மோசடி வழக்கு விசாரணையில் இருக்கும் போது, எப்படி வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும் என கஜபதியின் உடலை எடுக்க விடாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.