இந்தியாவில் வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று இருக்கும் போதிலும், வரதட்சணை கேட்பதும் அது சார்ந்த மரணங்களுக்கு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் கூட, நமது அண்டை மாநிலமான கேரளாவில் 26 வயதான இளம்பெண் மருத்துவர் வரதட்சணை கொடுமையால் தற்காலை செய்து கொண்டது நாட்டையே உலுக்கியது. அதைத் தொடர்ந்து, தற்போது ஒரு சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
வரதட்சணை கொடுமை:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வண்டித்தனம் பகுதியைச் சேர்ந்தவர் சஹானா சாஜி. இவருக்கு கட்டக்கடா என்ற பகுதியைச் சேர்ந்த நவ்பல் என்ற இளைஞருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்களின் திருமணத்தின்போது, பெண் சஹானா சாஜி வீட்டில் 75 சவரன் நகை வரதட்சணையாக மணமகன் வீட்டாருக்கு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், திருமணம் நடந்ததில் இருந்து, கூடுதல் வரதட்சணை கொடுக்கும்படி, பெண் சஹானா சாஜியை, அவரது கணவர் நவ்பல், மாமியார் சுமிதாவும் துன்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த மூன்று மாதங்களாக கூடுதல் வரதட்சணை வேண்டும் என்று மாமியாரும், கணவரும் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், அந்த பெண் கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார்.
பெண் தற்கொலை:
வரதட்சணை கொடுமை தாங்க முடியாததால் பெண் சஹானா அவரது சொந்த ஊரான வண்டித்தனத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு தனது இரண்டு குழந்தையுடன் சென்று கடந்த சில நாட்களுக்கு வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று கணவர் நவ்பல் தனது சகோதரன் குழந்தையின் பிறந்தநாளுக்காக, வண்டித்தனம் பகுதியில் இருந்து தனது மனைவி வீட்டிற்கு வந்திருந்தார் நவ்பல். அப்போது, பிறந்தநாள் கொண்டாடத்திற்கு வரும்படி மனைவி சஹானாவை அழைத்திருக்கிறார். பெண் சஹானா வர மறுத்ததால், இரண்டு 2 வயது குழந்தையை எடுத்து சென்றிருக்கிறார்.
இதனால், தனது குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்ததால், வருத்தமடைந்த சஹானா சாஜி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண் சாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)