புதிய பெட்ரோல் பங்க் அமைக்க தடையின்மை சான்று வழங்க லஞ்சம் கேட்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் தடையின்மைச் சான்றினை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன். இவர் சீர்காழி தாலுக்கா கடவாசல் கிராமத்தில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக கடந்த 2022 -ம் ஆண்டு ஜனவரி மாதம் தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்கான 11 நிபந்தனை மனுக்களை சீர்காழி வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் களஆய்வு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கடந்த மாதம் சம்பந்தப்பட்ட இடத்தினை கள ஆய்வு செய்து தடையின்மை சான்று வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் தடையின்மை சான்றுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் சிவச்சந்திரன் வழங்கியுள்ளார். இருந்தபோதிலும் இதுநாள்வரை தனக்கு தடையின்மைச் சான்று வழங்கவில்லை என்றும், சான்று பெறுவதற்கு முருகானந்தம் என்ற அதிகாரி 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறி சிவச்சந்திரன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் புகார் மனு அளித்தார்.
மனுவை விசாரித்த ஆட்சியர் உடனடியாக சான்றுகள் வழங்க உத்தரவிட்டதன் பெயரில் ஒரு மணி நேரத்தில் சிவச்சந்திரனுக்கு தடையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் லஞ்சம் கேட்ட அலுவலர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்