காதல் தகராறில் சினிமா துணை நடிகர் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பம்பை சிந்து நகர் சேக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துபிரசாத். இவர் சினிமாவில் துணை நடிகராக உள்ளார். முத்து பிரசாத் பாண்டிச்சேரியை சேர்ந்த துணை நடிகை ஆர்த்தியை காதலித்து வந்துள்ளார். அப்பெண் பூந்தமல்லியில் உள்ள தனது அக்கா வீட்டில் இருந்து சினிமா வாய்ப்புகளில் நடித்து வருகிறார். 

இதனிடையே துணை நடிகை ஆர்த்திக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதனால் மாப்பிள்ளை பார்த்து ஒன்றரை வருடத்திற்கு முன்பே நிச்சயமும் செய்துள்ளனர். ஆனால் ஆர்த்தி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், முத்து பிரசாத்தை தான் திருமணம் செய்வேன் எனவும் கூறீ வந்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர் முத்துபிரசாத்திடம் பேச அழைத்துள்ளனர். 

Continues below advertisement

முதலில் பயந்துபோன முத்து பிரசாத் ஆர்த்தி பெற்றோரை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் ஆர்த்தி காதல் விவகாரம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு தெரிய வர,அவர் ஆர்த்தியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை முத்துபிரசாத்திடம் கூறவே, அவர் பொது இடத்தில் பெற்றோரை சந்திப்பதாக கூறியுள்ளார். 

இதனையடுத்து கடந்த மார்ச் 7 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர சொல்லி ஆர்த்தி குடும்பத்தினர் சொல்ல, முத்துபிரசாத் நண்பர் ஒருவருடன் அங்கு சென்றுள்ளார்.இருவரையும் அங்கிருந்து காரில் ஏற்றி பூண்டி ஏரி அருகேயுள்ள பெண்ணலூர்பேட்டை காட்டுப்பகுதிக்கு ஆர்த்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்கு ஆறு பேர் கொண்ட கும்பல் முத்து பிரசாத்தை கட்டை மற்றும் கைகளால் தாக்கியுள்ளனர். மேலும் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். மேலும் வழிநெடுக முத்து பிரசாத்தின் சட்டையை கழற்றி முதுகில் கட்டையால் பலமாக தாக்கியுள்ளனர். உடன் சென்ற நண்பர் கொடுத்த தகவலால் உறவினர்கள் வந்து பெண்ணலூர்பேட்டை காவல் துறையினர் உதவியுடன் முத்து பிரசாத்தை மீட்டனர். இந்நிலையில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணலூர்பேட்டை காவல் துறையினரிடம் முத்து பிரசாத் புகார் அளித்துள்ளார்.