அமெரிக்காவுக்கு இன்று அரசுமுறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் ட்விட்டரின் உரிமையாளருமான எலான் மஸ்கை சந்திக்க உள்ளார். முன்னதாக, 2015ஆம் ஆண்டு, கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு சென்றிருந்த பிரதமர் மஸ்க்கை சந்தித்தார். 


இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையா?


ஆனால், அப்போது, ​​ட்விட்டர் நிறுவனத்தை அவர் சொந்தமாக வைத்திருக்கவில்லை. இந்தியாவில் தொழிற்சாலையை திறக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில், மஸ்கை மோடி சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதுகுறுத்து தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்கு மஸ்க் கூறுகையில், "இந்த ஆண்டு இறுதிக்குள் டெஸ்லா தனது இந்திய தொழிற்சாலையை அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்ய வாய்ப்புள்ளது" என்றார்.


பிரதமர் இன்று நியூயார்க்கில் தரையிறங்கிய பிறகு பல்வேறு துறைகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட நிபுணர்களை சந்திக்கிறார்.
இதில், நோபல் பரிசு பெற்றவர்கள், பொருளாதார வல்லுநர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்குவர். 


"இந்தத் தலைவர்களுடனான பிரதமரின் உரையாடல்கள், அமெரிக்காவின் வளர்ச்சிகளைப் புரிந்துகொள்வதையும், சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்" என அரசு தரப்பு தகவல் தெரிவிக்கிறது.


யார், யாரை சந்திக்கிறார் பிரதமர் மோடி?


மஸ்கை தவிர, எழுத்தாளர் மற்றும் வானியற்பியல் நிபுணரான நீல் டி கிராஸ் டைசன், பொருளாதார நிபுணர் பால் ரோமர், புள்ளியியல் நிபுணர் நிக்கோலஸ் நாசிம் தலேப் மற்றும் முதலீட்டாளர் ரே டாலியோ ஆகியோரை பிரதமர் சந்திக்கிறார்.


இந்திய-அமெரிக்க பாடகர் ஃபாலு ஷா, எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஜெஃப் ஸ்மித், முன்னாள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி மைக்கேல் ஃப்ரோமான், தூதர் டேனியல் ரஸ்ஸல் மற்றும் பாதுகாப்பு நிபுணர் எல்பிரிட்ஜ் கோல்பி ஆகியோரையும் பிரதமர் சந்திக்க உள்ளார்.


மருத்துவரும் நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் பீட்டர் அக்ரே, சுகாதார நிபுணர் டாக்டர் ஸ்டீபன் கிளாஸ்கோ மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் கலைஞருமான சந்திரிகா டாண்டன் ஆகியோரையும் பிரதமர் சந்திக்க உள்ளார்.


அமெரிக்காவுக்கு வருமாறு நாடாளுமன்றத்தின் இரு அவைகள் - பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டும், கட்சி சார்பற்று, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்ற உள்ள முதல் இந்தியப் பிரதமர் மோடிதான்.


இந்த பயணத்தின்போது, முக்கியத்துவம் வாய்ந்த ஜெட் இன்ஜின் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடிக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான உறவில் அந்த உரை முக்கிய பங்காற்றியதாக அமெரிக்க அதிபர் பைடன் குறிப்பிட்டுள்ளார்.