கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவரை வழக்கறிஞர்கள் பிடித்து அடித்து உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ராமநாதபுரம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி கவிதா (33). கவிதா 2016 ம் ஆண்டு பேருந்தில் பயணித்த பயணிடம் 10 பவுன் தங்க நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த நிலையில், வழக்கு தொடர்பான வாய்தாவிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். கவிதா தனது இரு குழந்தைகளையும், கணவரையும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே கவிதாவிற்கும் சிவாவிற்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்ததும் தெரிகிறது. இவ்வாறான சூழலில் இன்று அந்த வழக்கில் ஆஜராக வந்திருந்தார். அவரைப் பின் தொடர்ந்து வந்த சிவக்குமார் வழக்கு தொடர்பாக நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த கவிதாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் சிவா பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை கவிதாவின் உடல் மேல் பரவலாக ஊற்றியுள்ளார். இதில் ஆடைகள் எரிந்து கவிதா பலத்த காயமடைந்துள்ளார். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்த வழக்கறிஞர் தடுக்க முற்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் சிலர் மீதும் ஆசிட் பட்டதில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆசிட் வீசிய சிவாவை அங்கிருந்த வழக்கறிஞர்கள் அடித்து பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் சிவக்குமாரை நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து சென்ற போது, காவல் துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் சிவக்குமாரை அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த கவிதா உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் இதே நீதிமன்ற வளாகம் அருகே ரவுடிகளுக்கிடையான மோதலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு குற்ற சம்பவம் நீதிமன்றத்திற்கு உள்ளேயே நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த கோவை மாநகர வடக்கு துணை ஆணையர் சந்தீஸ், முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இடையேயான பிரச்சனையில் ஆசிட் ஊற்றியது தெரியவந்துள்ளதாகவும், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் மறைத்து ஆசிடை எடுத்து வந்ததால் நீதிமன்றத்தில் இருந்து அவர்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார். தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஆசிட் வீச்சிற்கான காரணம் விரைவில் தெரிவிக்கப்படும் என அவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக பந்தய சாலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்பத் தகராறு காரணமாக ஆசிட் வீசினாரா அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்