மறைந்த பாடகர் டி.எம். சௌந்தரராஜன் 100 வது பிறந்தநாளையோட்டி, மந்தவெளி மேற்குவட்ட சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மறைந்த பாடகர் பத்மஸ்ரீ டி.எம். சௌந்தரராஜனின் 100 வது பிறந்த நாள் வருகின்ற (24.3.2023) நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து, இவரை சிறப்பு செய்யும் விதமாக மந்தவெளி மேற்குவட்ட சாலைக்கு பத்மஸ்ரீ டி.எம். சௌந்தரராஜன் சாலை என பெயர் மாற்றப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், “
1. மறைந்த பிரபல பின்னணிப் (பாடகர் பத்மஸ்ரீ திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் 100-வது பிறந்த தினம் வருகின்ற 24:03.2023 அன்று வருவதையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-9, வார்டு எண்-126-ல், அன்னார் வசித்துவந்த வீடு அமைந்துள்ள சென்னை மந்தவெளிப்பாக்கத்தின் மேற்கு வட்ட சாலையின் பெயரினை "டி.எம்.சௌந்தரராஜன் சாலை" என பெயர் மாற்றம் செய்ய அரசாணை வழங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி முதன்மைச் செயலாளர்/ ஆணையர் அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார்.
2. முன்னதாக, நான்காவதாக படிக்கப்பட்ட அரசாணையில் அறிவுறுத்தப்பட்டவாறு, சென்னை மந்தவெளிப்பாக்கத்தின் மேற்கு வட்ட சாலையின் பெயரினை "டி.எம்.சௌந்தரராஜன் சாலை" என பெயர் மாற்றம் செய்திட உரிய தீர்மானத்தினை இயற்றி பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் முன் ஒப்புதலுக்கு வைத்திட மேலே ஐந்தாவதாக படிக்கப்பட்ட அரசு கடிதத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி முதன்மைச் செயலாளர்/ ஆணையருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3. இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி முதன்மைச் செயலாளர் / ஆணையர் மேலே ஆறாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-9. வார்டு எண்-128-ல். திரு டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் வசித்துவந்த வீடு அமைந்துள்ள சென்னை மந்தவெளிப்பாக்கத்தின் மேற்கு கட்ட சாலையின் பெயரினை "டி.எம்.சௌந்தரராஜன் சாலை என பெயர் மாற்றம் செய்ய, மன்றத்தின் பின்னேற்பு அனுமதிக்குட்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதன் அடிப்படையில் மேற்கு வட்ட சாலையின் பெயரினை "டி.எம்.சௌந்தரராஜன் சாலை" என பெயர் மாற்றம் செய்ய அரசாணை வழங்குமாறு பரிந்துரை செய்துள்ளார்.
4. மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் நகராட்சிக்குட்பட்ட சாலைகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றிற்கு பெயர் மாற்றுதல், பெயரிடுதல் போன்ற செயற்குறிப்புகளை ஒத்தி வைக்க ஆணையிடப்பட்டது. இவ்வாணை மேலும் பரிசீலிக்கப்பட்டு, இவ்வாறு பெயர் வைப்பதில் பல சிக்கல்கள் உருவாகின்ற காரணத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்ட அறிவுரைகள் வலியுறுத்தப்படுவதுடன், மாநகராட்சிகள் உட்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் புதிதாக பெயர் வைப்பது, ஏற்கெனவே உள்ள பெயரை மாற்றுவது குறித்த தீர்மானங்களை இயற்றி அரசுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்காணும் அரசாணையை உறுதி செய்து, மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது. இருப்பினும், மிக அவசியமான நிகழ்வுகளில் இவ்வரசாணைகளுக்கு விலக்களித்து பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
5. பெருநகர சென்னை மாநகராட்சி முதன்மைச் செயலாளர் / ஆணையரின் செயற்குறிப்பினை கவனமாக பரிசீலித்து, பரிசீலனைக்குப்பின், சிறப்பு நேர்வாக. மேலே ஒன்று முதல் மூன்று வரை படிக்கப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு விலக்களித்து, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-9, வார்டு எண்-126-ங் திரு டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் வசித்துவந்த வீடு அமைந்துள்ள சென்னை மந்தவெளிப்பாக்கத்தின் மேற்கு வட்ட சாலையின் பெயரினை “டி.எம். சௌந்தரராஜன் சாலை” என பெயர் மாற்றம் செய்து அரசு ஆணையிடுகிறது.” என வெளியிடப்பட்டுள்ளது.