கோவையில் பெண் விவகாரம் தொடர்பாக குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சினையில் தொழிலாளியை குத்தி கொலை செய்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் ஆனையங்காடு பகுதியை சேர்ந்தவர் வசந்தி. இவருக்கும் பாக்கியராஜ் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று பாக்கியராஜ் வசந்தி வீட்டில் இருக்கும் போது, அங்கு வந்த கதிர்வேல் என்பவருக்கும் பாக்கியராஜூக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கதிர்வேல் வீட்டில் இருந்த ஸ்கூரு டிரைவரால் பாக்கியராஜ் கழுத்தில் குத்தி கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கதிர்வேலை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஏற்கனவே பல ஆண்டுகளாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருந்ததாகவும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இருவரும் பிரிந்து விட்ட நிலையில், வசந்தி பாக்கியராஜூடன் உறவை ஏற்படுத்திக் கொண்டதாகவும், கதிர்வேலை பார்க்கும் போது எல்லாம் பாக்கியராஜ் கிண்டலாக பேசி வந்த நிலையில், மதுபோதையில் இருந்த கதிர்வேல் பாக்கியராஜை குத்தி கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கதிர்வேலை சிங்காநல்லூர் காவல் துறையினர் கதிர்வேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பாக்கியராஜ் மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடதக்கது