அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும் கட்டாயம் க்யூட் முதுகலைத் தேர்வைப் பின்பற்ற வேண்டும் என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இளநிலை க்யூட் தேர்வுகள் என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
முதுகலைத் தேர்வுக்கும் கட்டாயம்
பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் 3 பிரிவுகளாகக் கேட்கப்படுகின்றன. முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும். இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். 2ஆவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். 3ஆவது பிரிவில், பொதுவான கேள்விகள் கேட்கப்படும்.
அதேநேரத்தில் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு க்யூட் முதுகலைத் தேர்வு கட்டாயமில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும் கட்டாயம் க்யூட் முதுகலைத் தேர்வைப் பின்பற்ற வேண்டும் என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஒற்றைத் தேர்வு மூலம் சமமான வாய்ப்பு
இதுகுறித்து அவர் பேசும்போது, ''CUET தேர்வு நாடு முழுவதும் குறிப்பாக வட - கிழக்கு பகுதிகளில், கிராமப் புறங்களில் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் படிக்கும் தேர்வர்களுக்கு சமமான வாய்ப்பை வழங்குகிறது. ஒற்றைத் தேர்வு மூலம் தேசம் முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளிக்கிறது.
க்யூட் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும் க்யூட் முதுகலைத் தேர்வைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்'' என்று ஜெகதிஷ் குமார் தெரிவித்தார்.
2023-24ஆம் ஆண்டில் க்யூட் முதுகலைத் தேர்வுகள் ஜூன் 1 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. முன்னதாக, க்யூட் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து 90 பல்கலைக்கழகங்கள், 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநிலப் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.