தருமபுரி நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை சிசிடிவி உதவியுடன் நகர காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து ஏழு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

 

தருமபுரி நகரப் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, பேருந்து நிலையம், கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளுக்கு செல்வதற்காக கடைகளுக்கு வெளியே நிறுத்திவிட்டு செல்லும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்துள்ளது. இது குறித்து தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. இந்த புகாரினை தொடர்ந்து திருட்டு சம்பவம் ஈடுபடுபவர்களை பிடிக்க தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உத்தரவு பேரில், தருமபுரி துணை காவல் கண்காணிப்பாளர் வினோத் தலைமையிலான காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும்  இருசக்கர வாகனங்கள் திருட்டு புகார் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை, காவல் துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரனையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நபரின் இருசக்கர வாகனத்தை நபர் ஒருவர் திருடிக் கொண்டு வெளியேறும் காட்சியை வைத்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். 

 



 

இந்த விசாரணையில் அந்த நபர் தருமபுரி மாவட்டம் அரியகுளம் பகுதி சேர்ந்த, 17 வயதுடைய சிறுவன் (ஹரிஹரன்) என்பது தெரியவந்தது . இதரை தொடர்ந்து அந்த சிறுவனை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்பொழுது தருமபுரி நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடி சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனை தொடரந்து சிறுவனை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து திருடி வைத்திருந்த ஏழு இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து தருமபுரி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே திருடப்பட்டு வந்த இருசக்கர வாகனங்களையும் இந்த சிறுவனை திருடினாரா? இல்லை இவருடன் யாரேனும் கூட்டாளிகள் இருக்கின்றனவா என்றும், காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வளவு சிறிய வயதில் இந்த சிறுவன் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

 



 

கடந்த சில மாதங்களாக தருமபுரி நகர் பகுதிகளில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருடுபோய் உள்ளது. மேலும் இந்த சிறுவன் திருடியது ஏழு வண்டிகள் மட்டும் தானா?  இல்லை ஏதேனும் திருடிய வண்டிகளை விற்பனை எதுவும் செய்துள்ளாரா என்றும், அவ்வாறு விற்பனை செய்திருந்தால் யாரிடம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது என்பது குறித்து தனிப்படை காவல் துறையினர் சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையின் முடிவில் சிறுவனுக்கு மருத்துவர்கள் மூலம் மன நல ஆலோசனைகள் வழங்கி சீர்திருத்தம் செய்வதற்கும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். தருமபுரி நகர பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்து சிறுவனை சிசிடிவி உதவியுடன் காவல் துறையினர் பிடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறுவன் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.