சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேரை கட்டப் பஞ்சாயத்து செய்து தப்பிக்கவிட்டதும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தமாக ரூ.1 லட்சம் கொடுத்து விஷயத்தை மூடி மறைக்க முயன்றதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவல்துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. கன்சாபெல் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியுள்ளதாவது:
"இந்தச் சம்பவம் கடந்த 9ம் தேதி நடந்துள்ளது. ஒரு திருமணத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது சிறுமியை 4 பேர் வழிமறித்து காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளனர். அங்கே அந்தச் சிறுமியை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் ஊர் பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். அங்கேயே பேசித் தீர்க்க முயற்சி செய்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் பஞ்சாயத்தில் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து 4 பேரும் சேர்ந்து சிறுமிக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது. உடனே அந்தத் தொகையை தர முடியாது எனக் கூறி இழப்பீடாக ரூ.10,000 வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக எங்களுக்கு தகவல் கசிந்தது. நாங்களே ஊருக்குச் சென்று சம்பவம் குறித்து விசாரித்தோம். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் தந்தையிடம் வாக்குமூலம் பெற்றோம். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என்று போலீஸ் கண்காணிப்பாளர் பிரதீபா பாண்டே தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் குற்றத்தை மறைக்க முயன்ற ஊர்க்காரர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீபா பாண்டே தெரிவித்தார்.
விவேக் பட காமெடி பாணியில் நடந்த கொடூரம்:
நடிகர் விவேக் ஒரு படத்தில் அமெரிக்க ரிட்டர்னாக ஊருக்கு வந்திருப்பார். ஊரில் பஞ்சாயத்துத் தலைவராக இருந்து கொண்டு தனது தந்தை சாத்தப்பன் கூறும் பல்வேறு தீர்ப்புகளையும் மாற்றுவார். பெண் சிசு கொலை, மூட நம்பிக்கையால் முளைக்கு அவசர் கோயில்கள், குடும்பக் கட்டுப்பாட்டில் காட்டப்படும் சுணக்கம் என பல்வேறு சிந்தனையைத் தூண்டும் செயல்களைப் பற்றி பேசியிருப்பார்.
அப்படி அவர் அந்தப் படத்தில் பாலியல் பலாத்கார பஞ்சாயத்து சீனில் நடித்திருப்பார். அதில் மைனர் குஞ்சு என்ற கேரக்டர் பலாத்கார புகாருக்காக பஞ்சாயத்தில் நிற்பார். பாதிக்கப்பட்ட பெண்ணை அவருக்கே கல்யாணம் செய்து வைக்குமாறு விவேக்கின் தந்தை சாத்தப்பன் தீர்ப்பளிப்பார். அதனை ஏற்றுக் கொள்ளாத பெண், என்னை பலாத்காரம் செய்தவருக்கு என்னை திருமணம் செய்து வைப்பது எப்படி நியாயமாகும் என்று கேட்பார். அதற்கு அந்த மைனரிடம் சரி நீ அப்படியென்றால் அபராதம் கட்டு என்பார்கள். அதற்கு அவர் போன பஞ்சாயத்திலேயே சேர்த்துக் கட்டிவிட்டேன் என்பார். அதற்கு விவேக் அட்வான்ஸ்ட் புக்கிங்கில் ரேப் செய்கிறீர்களோ என்று மரத்துக்குப் பின்னால் அழைத்துச் சென்று தகுந்த தண்டனை அளிப்பார்.
இவையெல்லாம் நாம் ஏதோ சினிமாவில் வரும் காட்சி என்று நினைத்துவிடக் கூடாது என்பதை உணர்த்தியுள்ளது சத்தீஸ்கர் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஊர்ப் பஞ்சாயத்தில் வழங்கிய தீர்ப்பு.