சென்னை பரங்கிமலை ஓடும் ரயில்முன்பு கல்லூரி மாணவி சத்யாவை தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர் சதீஷை தனிப்படையினர் கைது செய்தனர். 


ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ், அதே பகுதியில் சத்யா என்ற மாணவியை ரயிலில் தள்ளி விட்டு நேற்று தப்பியோடினார். சதீஷ் தள்ளிவிட்டதால் ரயிலில் சிக்கிய மாணவி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ரயில்வே போலீஸ் சார்பில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை ஆணையம் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தேடப்பட்ட வந்த நிலையில், தற்போது சதீஷ் கைது செய்யப்பட்டார். 


இந்தநிலையில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட நிலையில் சத்யாவின் தந்தை மாணிக்கம் மாரடைப்பால் காலமானார். மகள் சத்யா கொடூரமாக கொல்லப்பட்ட சோகத்தில் அவரது தந்தை மாணிக்கம் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மகள் சத்யா உடல் வைக்கப்பட்டிருக்கும் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையிலேயே தந்தை மாணிக்கம் உடலும் தற்போது வைக்கப்பட்டுள்ளது. 


நடந்தது என்ன..? 


சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் ராஜா மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (23) இவர் ஓய்வு பெற்ற காவலரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து,வரும் பெண் தலைமை காவலரின் மகள் சத்யா (20), தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  சதீஷ் மற்றும் சந்தியா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக நண்பராக பழகி வந்துள்ளனர்.

 

நாளடைவில் சதீஷ் மற்றும் சத்யா ஆகிய இருவரின், நட்பானது படிப்படியாக வளர்ந்து காதலாக மாறியுள்ளது. இந்தநிலையில் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. சத்யா மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் எப்பொழுதும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் சந்திப்பது வழக்கம். வழக்கம்போல் நேற்று இருவரும் மதியம் 1:30 மணி அளவில், பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளனர்.

 

அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ், சத்தியாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். இதில் ரயிலில், சிக்கி சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் உடனடியாக சதீஷை மடக்கி பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் சதீஷ் அங்கிருந்து பொதுமக்களை மிரட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட சதீஷிடம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

நாளுக்குநாள் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 

 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கை உறுதி செய்கிறது. குறிப்பாக, இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் நாட்டிலேயே முதல் இடத்தில் டெல்லி உள்ளது.


டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.


கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது. 


டெல்லியில் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.