கொரோனா நோய் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பிட்ட சில நாடுகளில் மூன்றாவது அலை தலையெடுத்திருப்பதாக தகவல் வெளியாகிறது. இந்தியாவில் கொரோனா வேகம் தற்சமயம் குறைந்துவருகிறது. சில மாநிலங்களில் மட்டும் கொரோனா அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் மிகவேகமாக  கொரோனா தொற்று குறைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் தினமும் 7 ஆயிரம் நபர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு 2 ஆயிரமாக குறைந்தது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து 24290 நபர்கள் மட்டும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால் பெருமூச்சு விட்டதுபோல் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கொரோனா பணி செய்துவருகின்றனர்.


 

 

 



 வண்டலூர் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்ததை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஒரு வாரம் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். வரும் நாளை (7ஆம் தேதி) காலை 6 மணியுடன் தளர்வுகள் அற்ற ஊரடங்கு முடியவிருந்த நிலையில் வரும் 14-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 



இந்நிலையில் இன்று சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் காவல்துறையினர் எப்போதும் போல வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது  காரில் வந்த இளம் பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அந்த பெண் எந்தவித அத்தியாவசிய பணிக்காகவும் வெளியே செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அந்த பெண்ணின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து காவல்துறையினர், தெரிவித்துள்ளனர். இதனால் அந்த இளம் பெண் அவரது வீட்டிற்கு ஃபோன் செய்து பேசினார். இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் அந்த இளம் பெண்ணின் தாயார் சொகுசு காரில் பறந்து சேத்துப்பட்டு சிக்னலுக்கு வந்தடைந்தார்.

 




 

முகக்கவசம் கூட அணியாமல் வந்த அவர் காவல்துறையை கடுமையாக பேசினார். ”நான் வக்கீல் தான் உங்க யூனிஃபார்மை  கழட்டிவிடுவேன்”  என்றும், ’போடா, வாடா’ என்று ஒருமையிலும் திட்டித் தீர்த்தார். அப்போது கோபமடைந்த காவல்துறையினர் மரியாதையாக பேசுங்கள் ஒருமையில் பேசாதீங்க என்று அட்வைஸ் கொடுத்தனர். ஆனால் அது, எதையும் காதில் வாங்காமல் அவரது மகளைக் காரை எடுக்கச்சொல்லி உடனடியாக வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர்  அவர்கள் தவறாக பேசி நடந்துகொண்ட வீடியோவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதில் சிலர்  காவல்துறைக்கு ஆதரவாகவும், சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.