வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள பொண்ணை பகுதியை சேர்ந்தவர் அமுதா (26). இவர் சென்னை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையில்  செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தாம்பரம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.




 

அமுதா வேறு ஏதாவது நல்ல வேலை கிடைக்குமா, என்று வேலை தேடியும் வந்து உள்ளார். இவரது நண்பர் மூலம் பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த அஜய் ரமேஷ் என்பவர்  அமுதாவிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் ஆன்லைன் மூலமாக பேசலாம் என ரமேஷ் கூறியுள்ளார். மேலும் தான் சிங்கப்பூரில் வேலை செய்வதாகவும் யாருக்காவது வெளிநாட்டில் வேலை வேண்டுமானால், வாங்கி தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.

 

தொடர்ந்து ரமேஷ் அமுதாவிடம் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன். உங்களுக்கு வேலை வேண்டுமென்றால், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். உங்களுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டுமென்றால் எனக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் முதற்கட்டமாக கூகுள் பே மூலம் 50 ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள் எனவும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் தனக்கு வேலை கிடைக்கும் என்பதால் அமுதா 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். பின்னர், அமுதாவின் நண்பர்களான ராஜேஷ், சரஸ்வதி, மற்றொரு ராஜேஷ் ஆகியோரிடமும் ரூ. 3 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாக வேலை வாங்கி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். 



 

இதுபற்றி, அமுதா செல்போனில் அஜய் ரமேஷிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த அஜய் ரமேஷ், அமுதாவை தரக்குறைவாக பேசி, பணத்தை தர முடியாது என கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், இது தொடர்பாக கடந்த 3ம் தேதி குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் குரோம்பேட்டை போலீசார் அஜய் ரமேஷின் மனைவி பாரதி  என்பவரை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், சிங்கப்பூரில் வேலை செய்து வரும் அஜய் ரமேஷை சென்னை வரவழைத்து கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.