காரில் பேசி கொண்டிருந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்ஜோடியை மிரட்டி 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸார் கைது செய்யப்பட்டனர்
நிச்சயிக்கப்பட்ட பெண்
சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலையத்தில் அமிர்தராஜ், மணிபாரதி ஆகிய இருவரும் காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மணிமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட படப்பை அடுத்த ஆரம்பாக்கத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தனியாக நின்று கொண்டிருந்த காரில் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (30) மற்றும் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். கிருஷ்ணன் தன் காதலித்த பெண்ணுடன் , திருமணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் பே மூலம் நூதன முறையில் லஞ்சம்
அங்கு சென்ற காவலர்கள் இருவரும் அவர்களை மிரட்டும் வகையில், பேசி அவர்களிடம் முதலில் பத்தாயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் தங்களிடம் நான்காயிரம் ரூபாய் தான் இருக்கிறது என்று அவர்கள் கூறியதால், அந்த பணத்தை ஜிபே மூலம் லஞ்சமாக பெற்று விட்டு சென்றுள்ளனர்.
விசாரணைக்கு உத்தரவிட்ட காவல்துறை உயர் அதிகாரி
உடனடியாக கிருஷ்ணன் காவல்கட்டுபாட்டு அறைக்கு போலீஸார் என்று கூறி இருவர் தங்களை மிரட்டி பணம் பறித்து சென்றதாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் தனிக்குழு அமைத்து இருவரையும் கைது செய்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து ரகசியமாக விசாரணை செய்தனர். விசாரணையில் காவலர்கள் இருவரும் கூகுள் பே மூலம் லஞ்சமாக பணம் பெற்றதை ஒப்புக்கொண்டனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். காரில் பேசி கொண்டிருந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்ஜோடியை மிரட்டி 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்