பப்ஜி  ஆன்லைன் விளையாட்டு மோகத்தால், சொந்த வீடு கட்ட பெற்றோர் சிறுக சிறுக சேமித்த் வைத்த ரூ. 8 லட்சத்தை சிறுவர்கள் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பப்ஜி என்ற ஒத்தை வார்த்தையால் எத்தனையோ பெற்றோர் எத்தனையோ லட்சங்களை இழந்து பரிதவித்துள்ளனர். சிலர் தொடர்ந்து பப்ஜி கேம் பக்கவாதம் வந்தவர்க்ளும் உண்டு. இந்திய இளைஞர்களை மிகவும் கவர்ந்த மொபைல் கேமான பப்ஜி இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. சீன நிறுவனமான டென்சென்ட் உடன் இணைந்து விநியோகம் செய்ததாலேயே இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்டது. அந்தத் தடை நீங்கும் என நம்பிக்கையோடு பல மாதங்களாக காத்திருக்கின்றனர் இந்திய பப்ஜி ரசிகர்கள். ஆனால், தற்போதுவரை அந்தத் தடையானது நீங்கியதாக இல்லை. ஆனால் மற்ற பெயரில் அதேபோன்ற கேம்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. 




இந்த தற்போது பப்ஜி  ஆன்லைன் விளையாட்டு மோகத்தால், சொந்த வீடு கட்ட பெற்றோர் சிறுக சிறுக சேமித்த் வைத்த ரூ. 8 லட்சத்தை சிறுவர்கள் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை, தேனாம்பேட்டையில் வசிப்பவர் நடராஜன். மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு, 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் இரு மகன்கள் உள்ளனர். இவர்கள், பப்ஜி எனும் ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்துள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதியில், வணிகவரித் துறையில் பணிபுரியும் ராஜசேகர் என்பவரது வீடு உள்ளது. இவரது மகனும், நடராஜனின் மகன்களும் நண்பர்கள்.


மூவரும், பப்ஜி விளையாட்டில் மூழ்கி கிடந்தனர். அப்போது, நடராஜன் மகன்களிடம் ராஜசேகரனின் மகன், பப்ஜி விளையாட்டில், 'நியூ வெர்சன்' வந்துள்ளது. அதை வாங்குவதற்கு பணம் வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போது, ராஜசேகர் மற்றும் அவரது மனைவியும் இருந்துள்ளனர். அவர்களும், பணம் கொடுத்தால் பப்ஜி விளையாட்டிற்கான நியூ வெர்சன் வாங்கித் தருவதாக சிறுவர்களிடம் கூறியுள்ளனர்.




ஆன்லைன் விளையாட்டு மோகத்தால், சிறுவர்கள் இருவரும், தன் பெற்றோர் சொந்த வீடு கட்ட, வீட்டிலேயே சேமித்து வைத்திருந்த பணத்தை சிறிது சிறிதாக திருடியுள்ளனர். அந்த தொகையை, ராஜசேகர் குடும்பத்தாரிடம் கொடுத்துள்ளனர். வீட்டில் இருந்த பணத்தை நடராஜன் எண்ணிப் பார்த்தபோது, 8 லட்சம் ரூபாய் குறைந்துள்ளது. இது பற்றி மகன்களிடம் கேட்டபோதுதான் இத்தகைய திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. தொடர்ந்து நடராஜன் ராஜசேரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து நடராஜன், இது குறித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


அந்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுவர்களின் ஆன்லைன் விளையாட்டு மோகத்தை சாதகமாக பயன்படுத்தி, ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், மிரட்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.