பூட்டிய வீடு
சென்னை பெரம்பூர் பாரதி சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (40). அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் திருப்பதிக்கு சென்றிருந்தனர். ராஜ்குமார் மட்டும், வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டின் கதவை நன்கு பூட்டி விட்டு அருகிலிருந்த முடி திருத்தம் செய்யும் கடைக்கு சென்றுள்ளார்
இதனை தொடர்ந்து சுமார் 9 மணிக்கு வீட்டிற்கு திரும்பியபோது, கதவின் பூட்டு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பதறிய ராஜ்குமார் வீட்டிற்குள்ளே சென்று பார்த்த போது, அடையாளம் தெரியாத ஒரு நபர் நின்றிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜ்குமாரை கீழே தள்ளிவிட்டு வெளியே ஓடினார். அங்கு, தயார் நிலையில் இருந்தவரின் பைக்கில் ஏறி சென்று உள்ளனர் இதனைத் தொடர்ந்து இருவரை பிடிக்க ராஜ்குமார் முயற்சி செய்தும் இருசக்கர வாகனத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக சென்றுள்ளனர். ராஜ்குமார் பின்தொடர்ந்தும் இருவரும் அங்கிருந்து மறைந்துள்ளனர்.
19 சவரன் கொள்ளை
வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்தபோது, அதில் வைத்திருந்த செயின், கம்மல், பிரேஸ்லெட், மோதிரம், வளையல் என சுமார் சுமார் 19 சவரன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். புகாரை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் ராணி மற்றும் சத காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது, பீரோ அருகே ஒரு செல்போன் கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது அதில் சில புகைப்படங்கள் இருந்தன. அவைகளில் கொளத்தூர் மற்றும் எம்கேபி நகர் பகுதியில் குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் பிரபல திருடனின் புகைப்படம் அதிலிருந்து உள்ளது.
அட தூங்கிக்கொண்டிருந்த திருடன்
இதனை வைத்து காவல் துறையினர் குறிப்பிட்ட நபர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என யோசித்தனர். மேலும் செல்போன் நம்பரை வைத்து அந்த செல்போனை பயன்படுத்திய நபரின் வீட்டு முகவரியை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நேற்று அதிகாலை 5 மணிக்கு பெரவள்ளூர் ஆய்வாளர் சண்முகம் உள்ளிட்ட காவல்துறையினர், வியாசர்பாடி சாஸ்திரி நகர் 1-வது தெரு பகுதிக்கு சென்று பார்த்தபோது, ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்ட வடிவேல் பாண்டியன் (31) என்பவர் அசந்து தூங்கி கொண்டிருந்தார். அவரை தட்டி எழுப்பி காவல்துறையினர் விசாரித்துள்ளனர். விசாரணையில் தான் தான் அந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக வடிவேல் பாண்டியன் ஒப்புக்கொண்டார்.
அதிரடி கைது
இதனையடுத்து ராஜ்குமார் வீட்டில், திருடப்பட்ட 19 சவரன் நகைகளையும் காவல்துறையினர் மீட்டனர். மேலும் அவருக்கு வாகன ஓட்டியாக செயல்பட்ட வியாசர்பாடி கக்கன்ஜி காலனி பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (22) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். திருடப்போன இடத்தில் தவறுதலாக செல்போனை வைத்துவிட்டு வந்ததால் திருடிய 12 மணிநேரத்திற்குள் 2 திருடர்களை கைது செய்து 19 சவரன் நகைகளையும் மீட்டெடுத்த காவல்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் கைது செய்த இருவரிடம் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடச்சென்ற இடத்தில் செல்போனை விட்டுவிட்டு வந்து மாட்டிய திருடன் செயல் , சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.