முன் விரோதம் காரணமாக சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற பெண்ணை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில்,இறந்தவரின் தங்கை உட்பட 4 இளைஞர்கள் உள்பட மொத்தம் 5 பேரை ரயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்
ஆயுதங்களால் தாக்கி கொலை
கடந்த 19 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் சைதாப்பேட்டை இரயில் நிலைய நடைமேடையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, என்ற பெண்னை அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி,மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்நிலையில் பலத்த காயம் ஏற்பட்ட ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி இராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் இறந்துவிட்டார்.
கோவளத்தில் பதுங்கி இருப்பதாக
இந்த கொலை வழக்கில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு 3 நாட்கள் தொடர்ந்து புலன் விசாரணை செய்து 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொலை செய்து விட்டு 3 பேர் கோவளத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.
முன் விரோதம்
மேலும் உள்ள 2 பேர் நங்கநல்லூரில் கைது செய்யப்பட்டனர் என்றும் கூறினார். மேலும் இந்த கொலை வழக்கில் சக்திவேல், ஜெகதீஷ், சூர்யா, ஜான்சன், நாகவள்ளி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளான சக்திவேல் மற்றும் ஜெகதீசுக்கும், இறந்து போன ராஜேஸ்வரிக்கும் முன் விரோதம் இருந்தாதாகவும் கூறப்படுகிறது. முன் விரோதம் காரணமாக தான் இந்த கொலையை செய்துள்ளதாக குற்றவாளிகள் 5 பேரும் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
பெண்கள் யாரும் இனி..
சைதாப்பேட்டை ரயில் நிலைய சம்பவத்தை தொடர்ந்து, ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்களை அமைப்பது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரெயில் நிலையங்களில் சிசிடிவி அமைக்கப்படு் என்று கூறப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் பயணிக்கும் போது பெண்கள் யாரும் இனி பயப்பட வேண்டாம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று ரெயில்வே போலீஸ் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
சமீபத்தில் கொருக்குபேட்டையில் கல்லூரி மாணவர்கள் ரெயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கல்லூரி, அலுவலக நேரங்களில் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செண்டரல், எழும்பூர் போன்ற ரெயில் நிலையங்களில் சோதனை அதிகளவில் உள்ளது. அதே சமயத்தில் உள்ளூர் ரெயில்நிலையங்களில் இது போன்று கண்காணிக்கப்படுவதில்லை. இருப்பினும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். கடந்த 6 மாதத்தில் ரயில்வே போலீசார் மூலம் மக்களின் 131 சவரன் தங்க நகை மீட்கப்பட்டுள்ளது. 847 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 92 போன்கள், 12 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்