சென்னை புளியந்தோப்பு டிக்காஸ்டர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். 60 வயதாகும் இவருக்கு 53 வயதில் சித்ரா என்கிற மனைவி உள்ளார். நாகராஜன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். ஒருவர் திருமணம் ஆகி சென்று விட்டார். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கால கட்டத்தில் நாகராஜுக்கு சரியான வேலை கிடைக்காததால் சித்ரா சிறுக சிறுக அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாயகி என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.



4 லட்ச ரூபாய் வரை வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரிவர வாங்கிய பணத்தை தர முடியாத காரணத்தினால் வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து சுமார் 30 லட்சம் ரூபாய் வரை தர வேண்டும் என ரங்கநாயகி மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் , கடந்த வியாழ கிழமை அன்று  ரங்கநாயகி மற்றும் அவருடன் இரண்டு பேர் வந்து வாங்கிய கடனுக்கு வீட்டை எழுதி கொடுத்து விடுங்கள் இல்லையென்றால் நடப்பதே வேறு என மிரட்டி சென்றுள்ளனர்.



 

இதனால் பயந்து போன சித்ரா, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சித்ராவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு 50 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சித்ரா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சித்ரா மருத்துவமனையில் கந்து வட்டி கொடுமையால் தான்  மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாகவும். என்னை ரங்கநாயகி மற்றும் அவரது கணவர் சேகர் அவரது மகன் சுரேஷ் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து எனது வீட்டை எழுதி தரும்படி மிரடடினார்கள் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.



இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய பேசின்பிரிட்ஜ் போலீசார் , புளியந்தோப்பு டிக்காஸ்டர் ரோடு பகுதியைச் சேர்ந்த ரங்கநாயகி 52 மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் 55 ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தென்மாவட்டங்களில் தலை தூக்கியிருந்த கந்து வட்டி பிரச்சனை, தற்போது தலைநகர் சென்னையிலும் உயிரை காவு வாங்கும் அளவிற்க அட்ராசிட்டியாகியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் வசிக்கும் சென்னையில், இது மாதிரியான சூழல் நிலவுவது, மக்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கும். எனவே, கந்து வட்டி கும்பல் மீதான நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர்.