இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் என உயிர்பிழைத்தலுக்கு தேவையான அனைத்தும் பற்றாக்குறையாக உள்ளன. மக்கள் மருந்துக்கும், ஆக்சிஜனுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
கொரோனாவில் இருந்து குணமடைய பல்வேறு சிகிச்சையை பல்வேறு தரப்பினரும் எடுத்து வருகின்றனர். குறிப்பாக ரெம்டெசிவர் மருந்து கொரோனா காலத்தில் தவிர்க்க முடியாத மருந்தாக உள்ளது. அதிதீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ரெம்டெசிவரை பொருத்தவரை கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி, அவசரக்காலப் பயன்பாடாக மிதமான கொரோனா நோய் அறிகுறி உள்ள நோயாளிகளிடம் (ஆக்சிஜன் செலுத்தப்படுபவர்கள்) பயன்படுத்தலாம். அதேசமயம் இந்த மருந்தை வேறு மருந்தோடு இணைத்துப் பயன்படுத்துவதால் தீங்கு ஏற்படாது என்ற சூழலில் பயன்படுத்தப்படலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் தற்போது ரெம்டெசிவிர் மருந்துக்கு பல்வேறு இடங்களிலும் பற்றாக்குறை ஏற்பட்டது. பல இடங்களில் கள்ள சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டன. சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரெம்டெசிவர் விற்கப்படுகிறது. பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ரெம்டெசிவரை பெற்றுச் செல்கின்றனர்.
நோயின் எந்த அளவு பாதிப்புக்கு ரெம்டெசிவர் பயன்படுத்தப்படுகிறது? நல்ல பலன் தரும் ஒன்று என்றால் பற்றாக்குறைக்கு என்ன காரணம்? மருத்துவர்கள் பரிந்துரைக்காமலே உறவினர்கள் முன்னெச்சரிக்கையாக ரெம்டெசிவருக்கு காத்திருக்கிறார்களா? கள்ளசந்தை வியாபாரம் உண்டா? என ரெம்டெசிவரைச் சுற்றி பல்வேறு கேள்விகள் எழுந்து நிற்கின்றன. இந்நிலையில் கள்ளசந்தையில் ரெம்டெசிவரை விற்பதற்காக இறந்தவர் பெயரை பயன்படுத்தி மருந்து வாங்க வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெம்டெசிவர் மருந்து வேண்டுமென்றால் நோயாளியின் ஆதார், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு, பரிசோதனை முடிவு, சிடி ஸ்கேன் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் சென்று மருந்துகளை உரிய பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து வாங்க வரிசையில் நின்ற 3 பேரில் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விசாரித்தனர்.
(மாதிரிப்படம்)
தஞ்சாவூரைச் சேர்ந்த செல்வம் என்ற நோயாளிக்கு மருந்து வாங்க வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவரி பரிந்துரைச் சீட்டையும் காண்பித்துள்ளனர். அதனை வாங்கி போலீசார் சோதனை செய்ததில் நோயாளி செல்வம் கடந்த 7ம் தேதியே இறந்தது தெரியவந்தது. உடனடியாக கிறிஸ்டி பால், செல்வகுமார்,சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ள சந்தையில் விற்பதற்காக இறந்தவரின் பெயரில் மருந்து வாங்க இந்த கும்பல் திட்டமிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரெம்டெசிவர் பலருக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அவற்றை வாங்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. அப்படியிருக்கும் போது போலிகள் உலா வந்தால் எப்படி உரியவரிடத்தில் மருந்து போய் சேரும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.