சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சிக்கு உதவி வரும் அதே சூழலில், சில கும்பல்கள் அதே சமூக வலைதளங்களை பயன்படுத்தி மோசடி வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், லண்டனில் இருந்து பேசுவதுபோல பேசி சென்னையைச் சேர்ந்த நபர்களிடம் மர்மகும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.


இந்த நிலையில், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அந்த கும்பல் வடமாநில கும்பல் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் பெண் ஒருவர் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில், திடீரென அவர் தான் சென்னையில் நிலம் வாங்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இதற்காக, ரூபாய் 5 கோடியுடன் சென்னை வருவதாக கூறியுள்ளார்.




இந்த நிலையில், விமான நிலையத்தில் பணத்துடன் வந்தபோது சுங்க இலாகா அதிகாரிகள் தன்னை பிடித்துக்கொண்டதாகவும்,  ரூபாய் 14 லட்சத்து 50 ஆயிரம் அளித்தால் மட்டுமே தன்னையும், ரூபாய் 5 கோடி பணத்தையும் திருப்பி ஒப்படைப்பதாகவும் கூறியதாகவும் கூறியுள்ளார். இதனால், தனக்கு உடனடியாக ரூபாய் 14 லட்சத்து 50 ஆயிரம் தருமாறு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் உதவி கேட்டுள்ளார்.


அந்த பெண்ணின் பேச்சை நம்பிய அந்த தொழிலதிபரும் அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு ரூபாய் 14 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். அதன்பின்பு, அந்த பெண்ணை அவர் தொடர்புகொள்ள முயற்சித்தார். ஆனால், அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் பின்னரே, அந்த தொழிலதிபருக்கு தான் ஏமாந்த விஷயமே தெரியவந்துள்ளது.




இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் தொழிலதிபரிடம் பேசியது பெண் இல்லை என்றும், வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலே பெண் குரலில் பேசியுள்ளனர் என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்த கும்பல் டெல்லியில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்த சைபர்கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து டெல்லி சென்றனர். அங்கு பெண் குரலில் பேசி பல லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு வந்த மஜித்சல்மானியையும் ( வயது 46) அவரது சகோதரர் ஷானு ( வயது 36) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் இந்த குற்றத்திற்கு மூளையாக நைஜீரியாவைச் சேர்ந்த இமானுவேல்ஸ் என்பவர் செயல்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.


ஆனால், மஜித்சல்மானி மற்றும் ஷானு ஆகியோரின் கைதை அறிந்த இமானுவேல்ஸ் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண