சென்னை அடுத்த குன்றத்தூர் எருமையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (25). பிரகாஷ் அப்பகுதியில் குட்டி ரவுடியாக வலம் வருவது மட்டுமில்லாமல், கஞ்சா வியாபாரம் ஆகியவை செய்து வந்தார். பிரகாஷ் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பிரகாஷ் திடீரென கடந்த வருடம் நவம்பர் மாதம் மாயமானார். இது குறித்து பல்வேறு இடங்களிலும் விசாரித்தும் மகன் குறித்து தகவல் கிடைக்காமல் அவருடைய பெற்றோர் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், தனது மகனை காணவில்லை என்று அவரது பெற்றோர், மறைமலைநகர் போலீசில் கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். பிரகாஷ் ஏற்கனவே குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதால் அவருடைய நண்பர்கள் யாராவது அவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அதில், பிரகாஷை அவரது நண்பர்கள் சிலர் மண்ணிவாக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு வைத்து அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு பின்னர் திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் பிரகாஷின் உடலை வீசி அங்கிருந்து, தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மறைமலை நகர் போலீசார் இதுதொடர்பாக திருமுடிவாக்கத்தை சேர்ந்த பிரகாஷின் நண்பரான, கருத்து (26) உள்பட 4 பேரை பிடித்து விசாரித்த போது, திருமுடிவாக்கம் பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் ஓட்டல்களில் மாமூல் வாங்குவதில் பிரகாசுக்கும், கருத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக பிரகாஷ் சரியாக தனக்கு மாமுல் கிடைக்காததால் தனது நண்பனான கருத்தை கொலை செய்தால் தான் அந்த பகுதியில் பெரிய ரவுடி ஆகிவிடலாம் என்று எண்ணி அவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பிரகாஷிற்கு முன், கருத்து பிரகாஷை திட்டம் தீட்டி கொலை செய்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
உறவினர் வீட்டிற்கு வந்த பிரகாஷ்
மறைமலை நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பிரகாஷ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்றபோது, அங்கிருந்து பிரகாஷை மண்ணிவாக்கம் அழைத்துச் சென்று, அங்கு வைத்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு, உடலை கோணிப்பையில் மூட்டையாக கட்டி திருமுடிவாக்கத்தில் உள்ள கிணற்றில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. கிணற்றில் வீசப்பட்ட பிரகாஷின் உடலை, தாசில்தார் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் காவல்துறையினருடன் தற்போது தேடி வருகின்றனர். இந்த பாழடைந்த கிணற்றில் நீர் இருப்பதால், அதனை கழிவு நீர் வாகனம் வைத்து நீரை உறிஞ்சி அப்புறப்படுத்திவிட்டு பிரகாஷ் உடலை தேடும் பணியில் குன்றத்தூர் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.''
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்