சென்னையில் தனியார் பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பியபோது மாநகரப் பேருந்து மோதி 12-ம் வகுப்பு மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாநகரப் பேருந்து ஓட்டுநர் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

 



இந்தியா முழுவதும் 76வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.



 

சென்னை  குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடி விட்டு தனது சக தோழியுடன் சைக்கிளியில் வீடு திரும்பியபோது, பொழிச்சலூரிலிருந்து அஸ்தினாபுரம்  சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் கீழே விழுந்ததில் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வந்தனர். மேலும் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தன.



 

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய மாநகரப் பேருந்து ஓட்டுநர் தேவகுமார் (49), சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் விபத்து ஏற்பட்ட இடத்தில் மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் 10-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியையும், தமிழக அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் தான் விபத்து ஏற்படுகிறது அதனை அகற்றிட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர்.



 

இதுகுறித்து வெளியான சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதாவது மாணவிகள் இருவர் தனித்தனியே அவர்களின் சைக்கிளில் முறையாக சென்று கொண்டிருக்கின்றனர். சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்த சில வாகனங்களால், சைக்கிள் பயணம் செய்யும் மாணவிகள் ஒன்றன் பின் ஒன்றாக செல்கின்றனர். மாணவிகளின் பின்னால் மிதமான வேகத்தில் அரசு பேருந்து ஆனது செல்கிறது. இதனைத் தொடர்ந்து தான் அரசு பேருந்து மாணவி மீது மோதுகிறது. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தை கொண்டாடி விட்டு வீடு திரும்பிய மாணவி அரசு பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது