சென்னை புறநகர் பகுதி

 

சென்னை புறநகர் பகுதியாக தாம்பரம் மாநகர காவல் எல்லை இருந்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதியாக இருப்பதால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தாம்பரம் மாநகர எல்லையில் நடைபெற வாய்ப்புள்ளதால் , காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த வகையில் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்த தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், மதுவிலக்கு உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தாம்பரம் மாநகரம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 



சுங்கச்சாவடி அருகே கண்காணிப்பு

 

இந்நிலையில் பள்ளிக்கரணை மதுவிலக்குப்பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான தனிப்படையினர் கானாத்தூர் சுங்கச்சாவடி அருகே கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய வெளிநாட்டுப்பெண் ஒருவர், அங்கிருந்த நபரிடம் ஏதோ ஒரு சிறு பொட்டலத்தைக் கொடுக்கும்போது மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அப்பெண் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆன்யனி மோனிகா (30) என்பதும், கடந்த 9 மாதங்களாக வேளச்சேரி பாரதி நகரில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 



 

ஒரு கிராம் ஐயாயிரம்

 

மேலும் விசாரணையில் அவரது சகோதரரின் புற்றுநோய் சிகிச்சைக்காக மும்பை அப்போலோ மருத்துவமனைக்கு வந்ததும், அவர் சிகிச்சை முடிந்து நைஜீரியா சென்றுவிட்டதாகவும், தான் மட்டும் வேலை இல்லாததால் சென்னை வந்து தங்கி நைஜீரியாவில் இருந்து ஒரு நபர் மும்பை கொண்டு வந்து கொடுக்கும் கொகைன் போதைப்பொருளை வாங்கி வந்து, விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கிராம் 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவரது பேக்கை சோதனை செய்தபோது ஒரு கிராம் வீதம் 72 சிறு சிறு கொகைன் பாக்கெட்டுகள் இருந்தன. கொக்கைன் விற்ற பணமான, இரண்டு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நைஜீரிய நாட்டுப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கைப்பற்றப்பட்ட கொக்கையின் மதிப்பு  சுமார் 5.75 லட்சம் இருக்கலாம், என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



 

எங்கே செல்கிறது இதன் விளைவு?

 

சென்னை புறநகர் பகுதியாக இருக்கும் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த பகுதியில் வார இறுதி நாட்களில், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தம்பதிகள் இறுதி நாட்களை கழிப்பதற்காக அங்கு இருக்கும் விடுதிகளை பயன்படுத்துகின்றனர். அதேபோல ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகளும் இந்த விடுதிகளில் தங்குவது வழக்கமாக உள்ளது. இதுபோன்ற நபர்களை மையப்படுத்தி, உயர்ரக போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவது தொடர்கதை ஆகியுள்ளது. கஞ்சாவை தொடர்ந்து , தமிழ்நாட்டில் இதுபோன்ற போதை பொருட்களும் கிடைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.