சென்னை தாம்பரம் அருகே சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஊழியரை இளைஞர்கள் அடித்து உதைத்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

 

 

சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கொடுக்க வேண்டும் என ஹோட்டலில்..

 

சென்னை புறநகர் பகுதியில், அதிக அளவு இளைஞர்கள் போதை உள்ளிட்ட தவறான பழக்க வழக்கங்களில், அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தொடர் கதை ஆகியுள்ளது. அதே போன்று நாளுக்கு நாள் சென்னை புறநகர் பகுதிகளில் போதை பொருட்களால் ஏற்படும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடப்பேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஹோட்டலுக்கு, நேற்று முன்தினம் இரவு வந்த இரண்டு நபர்கள் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, அதற்கு பணம் தராமல் சென்றுள்ளனர். இதனை அடுத்து சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கொடுக்க வேண்டும் என ஹோட்டலில் இருந்த சங்கர் என்பவர் அவர்களிடம் கேட்டுள்ளார்.

 

ஊழியரிடம் சண்டை

 

அப்போது சங்கரிடம் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு, பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்கள். அங்கிருந்து சென்ற நபர்கள், சிறிது நேரத்தில் ஆட்டோவில் சிலரை அழைத்து வந்து, சங்கரை தகாத வார்த்தைகளால் திட்டி சண்டையிட்டு உள்ளனர். பில் கேட்டதால் கோபமடைந்து ஊழியரிடம் சண்டையிட்டுள்ளனர். பின்னர் கடையில் இருந்த நாற்காலியை எடுத்து அவரை அடித்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் 

 

இதில் காயம் அடைந்த சங்கர் சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில், குற்றப்பிரிவு ஆய்வாளர் சகிலா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று தாம்பரம் சானடோரியம் பகுதியில் தலைமறைவாக இருந்த கருப்பு (எ) வெங்கடேஷ் (26) மற்றும் கடப்பேரி பகுதியில் தலைமறைவாக இருந்த சுரேஷ் உதயா (எ) உதயா (24) ஆகியோர் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமுறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.