சென்னை சைதாப்பேட்டையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரபல ரவுடியை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தினை போலீஸார் அதிரடியாகக் களமிறங்கி தடுத்து நிறுத்தி குற்றவாளிகளையும் கைது செய்தனர்.


மதுரையைச் சேர்ந்தவர் பாலா. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர் மதுரையைச் சேர்ந்த மற்றொரு ரவுடியான சிவக்குமார் என்பவரை கொலை செய்தார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான பாலாவை போலீஸார் கைது செய்திருந்தனர்.


இந்நிலையில் இந்த வழக்கு விசாரணக்காக இன்று சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்திற்கு போலீஸார் பாலாவை அழைத்து வந்திருந்தனர். அப்போது அங்கு முகக்கவசம் அணிந்து சிலர் நின்றிருந்தனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் ஒருசிலர் கடைப்பிடித்து வருவதால் போலீஸாருக்கு இது குறித்து சந்தேகம் ஏதும் வரவில்லை. இந்நிலையில் தான் முகக்கவசம் அணிந்திருந்த அந்த ஐந்து பேரும் திடீரென பாலாவை நோக்கிப் பாய்ந்தனர். அப்போது சுதாரித்துக் கொண்ட போலீஸார் அந்த மர்ம கும்பலை சுற்றிவளைத்தது. இருப்பினும் 2 பேர் தப்பியோடினர். மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.


மூன்று பேரை விசாரித்ததில் சிவக்குமாரை கொலை செய்ததற்காகவே பழிவாங்கும் நடவடிக்கையாகவே பாலாவை கொலை செய்ய முற்பட்டதாகத் தெரிவித்தனர். தப்பியோடிய இரண்டு பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.


தமிழ்நாட்டில் 1686 கொலைகள் :


2021ஆம் ஆண்டில் இந்தியா முழுக்க பதிவு செய்யப்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் குறித்த மொத்த ஆவணத்தொகுப்பான தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கை அண்மையில் வெளியானது.


2021ஆம் ஆண்டில் இந்தியா முழுக்க 60 லட்சத்து 96,310 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020ஆம் ஆண்டை விட 7.6% குறைவு. இந்த வழக்குகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒன்று இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள். இன்னொன்று பிற சிறப்பு சட்டங்களின் கீழ் (போக்சோ, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம், மாநில சட்டங்கள் போன்றவை) பதிவு செய்யப்பட்ட வழக்குகள்.


கடந்த 2021ல் நாட்டில் நடைபெற்ற மொத்த கொலைகளின் எண்ணிக்கை. இதில் மிக அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 3717 குற்றங்கள் நடந்துள்ளன. பிஹாரில் 2799 கொலைகளும் மகாராஷ்டிராவில் 2330 கொலைகளும் நடந்துள்ளன. 2021ல் தமிழ்நாட்டில் 1686 கொலைகள் நடந்துள்ளன.


இவ்வாறு தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.