சென்னை கே.கே நகர் விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 26). இவர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பகுதியில் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 1ஆம் தேதி ரவி தனியாக வீட்டிலிருந்த போது மூன்று பேர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வருவதாக கூறி, ரவியை விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரவியின் மனைவி ஐஸ்வர்யா இந்த தகவலறிந்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்த போது, அப்படி யாரையும் அழைத்து வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

கிடைக்காத கணவர்

 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா தனது கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கடந்த 4ஆம் தேதி கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் போது தனது வீட்டின் அருகே செம்பியம் காவல் நிலைய காவலராக பணிபுரிந்து வந்த  செந்தில்குமார் என்பவர் அவரது காதலியுடன் வசித்து வந்ததாகவும், செந்தில்குமாருடன் இணைந்து தனது கணவர் ரவி தினமும் மது அருந்தி வந்ததாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். 



 

இந்நிலையில் தங்களது குழந்தை ஜெசிகா, செந்தில்குமாரின் வீட்டருகே சிறுநீர் கழித்ததால், செந்தில்குமாரின் குடும்பத்தோடு தங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது தனது கணவர் ரவியை செந்தில்குமார் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது கணவர் காணாமல்போன அந்த நாளே செந்தில்குமார் குடும்பத்துடன் வீட்டை காலி செய்துவிட்டு சென்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தனது கணவரை செந்தில்குமார் கடத்தி சென்றிருப்பதாக சந்தேகிப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

 

செல்போன் எண் 

 

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, காவலர் செந்தில்குமார் வீட்டில் விசேஷம் எனக்கூறி கடந்த 28ஆம் தேதி முதல் பணிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கே.கே நகர் போலீசார் தனிப்படை அமைத்து காணாமல் போன இருவரது செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தியதில், ஈக்காட்டுதாங்கல், ராமாபுரம் என காண்பித்து பின்னர் செல்போன் எண் ஸ்விட்ச் ஆகியிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக படாளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் அந்த சடலத்தை மீட்டுள்ளனர். காணாமல் போன ரவியின் உடலா என முழுமையாக உறுதிசெய்து அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

 

கைதான கவிதா

 

இதுகுறித்து கேகே நகர் போலீசார்  கவிதாவை கைது செய்து செங்கல்பட்டு படாளம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கவிதாவிடம் நடத்திய விசாரணையில், உயிரிழந்த ரவியின் குழந்தை ஜெசிகா, செந்தில்குமாரின் வீட்டருகே சிறுநீர் கழித்ததால்,  தங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக காவலர் செந்தில்குமார் கடும் கோபத்தில் இருந்தார். அவரை ஒரு தட்டு தட்டுவோம் என கூட்டிச் சென்ற பொழுது உயிரிழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அவருடைய உடலை எரிக்க திட்டமிட்டு செங்கல்பட்டு அருகே கொண்டு சென்று, பெட்ரோல் மற்றும் சர்க்கரை உதவியுடன் எரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.



 

அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும்

 

இதுகுறித்து காவல்துறையினர் தொடர்பு கொண்டு கேட்டபோது , காவலர் செந்தில்குமாருக்கும், ரவி வீட்டருகே குடியிருந்த, கவிதா என்ற பெண்ணுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கவிதாவிற்கும் ரவி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது, இந்த சண்டையின் காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் இறந்து போனவரின் உடல் ரவியின் உடல் தானா என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க, டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.



 

இரும்பு கடையில் ஒரு கால்

 

இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட ரவியின், ஒரு கால் பழைய இரும்பு கடையிலும், ஒரு கை புதர் பகுதியிலும் கிடந்துள்ளது. இதனை அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்து காவல் துறையினருக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் கொலையாளிகள் கை, கால்களை வீசி விட்டு சென்றனரா? அல்லது உடல் எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து நாய்கள் எடுத்து சென்றனவா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.