சென்னை அடுத்த மாங்காடு முத்தமிழ் நகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்தவர் கபீர் முகமது. இவர், மாங்காடு முத்தமிழ் நகர் பகுதியில் சிறிய கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கபீர் முகமது சிறை சென்று ஜாமினியல் வெளியே வந்திருப்பதாக தெரிகிறது. இதனால் மாங்காடு முத்தமிழ் நகர் பகுதியில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதிக்கு தனது வீட்டை மாற்றியுள்ளார் ‌



 

5 லட்சம் வரை கடன் பெற்ற கபீர் முகமது

 

சமீபத்தில்  சாலை விபத்து ஒன்றில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால், சிகிச்சைக்கு பணமின்றி தவித்த கபீர் முகமது,  மாங்காடு வீட்டின் முகவரியை பயன்படுத்தி, ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் ஐந்து லட்ச ரூபாய் வரை பணத்தை கடனாக பெற்றுள்ளார். சாலை விபத்தில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் முறையாக வருமானம் இன்றியும் கபீர் முகமது தவிர்த்து வந்ததால் செயலி மூலம் பெற்ற கடன்களை திருப்பி அடைக்க முடியாமல் தவித்துவந்துள்ளார்.  இதனால், ஆத்திரமடைந்த கடன் கொடுத்த நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் கபீர் முகமதுவிடம் பணம் கேட்டு நச்சரிக்க தொடங்கினர். ஆனாலும், கபீர் முகமது பணத்தை திருப்பி செலுத்தவில்லை. 

 



 

வெடிகுண்டு மிரட்டல்

 

பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்றால் இதை செய்வோம் அதை செய்வோம் என பல, வழிகளில் மிரட்டலும் கொடுத்து வந்துள்ளனர் கடன் செயலி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள். இந்தநிலையில், நேற்று முன்தினம் ஜப்பானில் இருந்து பேசுவதுபோல், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, மாங்காடு பகுதியில் வசித்து வரும் கபீர் முகமது என்பவர் மிகப் பெரிய சதி திட்டத்துடன், தனது வீட்டில் வெடிகுண்டுகளை தயாரிக்கும் வேலை செய்து எனக் கூறியுள்ளனர்.

 

வழக்கு பதிவு செய்து விசாரணை

 

இதுகுறித்து, உடனடியாக மாங்காடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், ஏராளமான போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் மாங்காடு, முத்தமிழ் நகர் பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். ஒரேநேரத்தில் நிறைய போலீசாரை கண்டதும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து நின்றனர். விசாரணையில் கபீர் முகமது ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன் புழல் பகுதிக்கு குடிபெயர்ந்து சென்றதும், அவர் ஆன்லைனில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால், அவரை பழி வாங்கும் நோக்கில் இவ்வாறு பொய் புரளியை கிளப்பி விட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.