சென்னையை அடுத்த ஆவடியில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படும் நபர் தட்டிக்கேட்ட கணவரை அடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு அரசு பஸ்சில் இளம்பெண் ஒருவர் தனது கணவ ருடன் பயணம் செய்தார். அவருக்கு பின் இருக்கையில் இருந்த 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது கணவரிடம் இதுகுறித்து தெரிவித்தார்.
இதனால் அந்த பெண்ணின் கணவர் ஆத்திரத்தில் எழுந்து என்ன என்று கேள்விக்கேட்டார். ஆனால் அந்த நபர், தான் ஆவடியில் காவல்துறை அதிகாரியாக உள்ளேன். தூக்க கலக்கத்தில் என் கை தெரியாமல் பட்டு விட்டது. அமைதியாக உட்கார் என்று திமிராக பேசியுள்ளார். இதனால் அந்த பெண்ணின் கணவர், அந்த நபரிடம் கடும் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு அந்தநபர், கையை தூக்கி அடிக்க பாய்ந்தார். இதனால் பயந்துப்போன அந்த பெண் கணவரை பேசாமல் அமரும்படி கூறியுள்ளார்.
அப்போது பிரச்சனைய வளர்க்க முயற்சித்த அந்த நபர், “காவல்துறை அதிகாரியான என்னையே கை நீட்டி பேசுறீயா?” என்றும் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியும் மீண்டும் மீண்டும் அடிக்க பாய்ந்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் பேருந்தை டிரைவர் சாலையோரமாக நிறுத்தினார். நடத்துனர் மற்றும் சக பயணிகள் இருவரையும் சமாதானம் செய்தனர். மேலும் அந்த நபரை, “பேசும்போதே அடிக்க பாய்வதா?” என கண்டித்து அமைதியாக வரும்படி பயணிகள் எச்சரிக்கை செய்தனர். இந்த காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக எடுத்த சக பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் உண்மையிலேயே அந்த நபர் போலீஸ்தானா என்றும், அந்த நபர் போதையில் இருந்தாரா என்றும் வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் அந்த நபரை தேடி வருகின்றனர்.