சென்னை வண்ணாரப்பேட்டையில் 2012ஆம் ஆண்டு 16 வயது சிறுமி ஒருவரை மாதவன் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் காவல்துறையினர் மாதவன் என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் 2015ஆம் ஆண்டு அவர் நிபந்தனை ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த மாதவன் காவல்துறையில் ஆஜராக கையெழுத்து போடாமல் இருந்து வந்துள்ளார். 


இதைத் தொடர்ந்து அவரை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்திருந்தது. மேலும் அவரை நீண்ட நாட்களாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த மாதவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தற்போது அவர் தொடர்பான மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவருடைய உண்மையான பெயர் மாதவன் இல்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் பல தகவல்கள் இவர் குறித்து தெரியவந்துள்ளது.


ஆள்மாறாட்டம் செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை:


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சோனமுத்து என்பவருக்கு  மாதவன்,தர்மலிங்கம் மற்றும் ராமலிங்கம் ஆகிய மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் மாதவன் என்பவர் சென்னையில் வசித்து வந்துள்ளார். அண்ணனின் வீட்டிற்கு தம்பி தர்மலிங்கம் வந்துள்ளார். அப்போது இங்கிருந்த சென்னை நண்பர் மூலம் தர்மலிங்கத்திற்கு சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சிறுமியிடம் அவர் தன்னுடைய பெயரை மாதவன் என்று கூறி பழகியுள்ளார். அத்துடன் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவு மேற்கொண்டுள்ளார். அதன்பின்னர் அந்தப் பெண்ணை ஏமாற்றியுள்ளார். இதையடுத்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் இவர் மாதவன் என்ற பெயரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். 




இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வந்த அவர் தன்னுடைய அண்ணன் மாதவனின் சான்றிதழை திருடி போலியான ஆவணங்கள் தயாரித்து சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். 2015ஆம் ஆண்டு அவர் சிங்கப்பூர் தப்பி சென்றுள்ளார். இந்தச் சூழலில் மாதவன் என்ற நபர் சென்னையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைவைத்து அவர்கள் சென்று பார்த்த போது அங்கு இருந்தது குற்றம் செய்தவரின் அண்ணன் என்று தெரியவந்துள்ளது. அவர் தன்னுடைய சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து கொண்டு தம்பி தர்மலிங்கம் தப்பி சென்றுள்ளதாக புகார் அளித்தார். 


 


இதை வைத்து காவல்துறையினர் தர்மலிங்கத்தை தேடி வந்துள்ளனர். அப்போது தர்மலிங்கம் 2017ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்பாக தர்மலிங்கம் சென்னை வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை வைத்து காவல்துறையினர் தர்மலிங்கத்தை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்ணன் பெயரில் தம்பி செய்த மோசடி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க:ஆன்லைன் செயலியால் விபரீதம்...போலி சாவி போட்டு வீட்டிற்குள் நுழைந்து நிர்வாண படம் எடுத்த இளைஞர் கைது !