மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு சென்னையில் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சேலத்தில் பணிபுரியும் அந்த பெண் அங்கிருந்து பேருந்து மூலம் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்திருக்கிறார். மாதவரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் இருந்து இறங்கிய அந்த பெண், பேருந்து நிலையம் வெளியே வந்திருக்கிறார். அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த ஒருவர், அவரை மாதவரம் வரை கொண்டு சென்றுவிடுவதாக கூறி பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரை அதே ஆட்டோவில் தள்ளி கடத்த முயற்சித்துள்ளார். சில நொடிகளில் மேலும் இருவர் அந்த ஆட்டோவில் அந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மாநில பெண்ணை தள்ளி ஏற்றி,   கடத்தி சென்றிருக்கின்றனர்.


பேருந்து இல்லாததால் சாலைக்கு வந்த பெண் கடத்தல்


மாதவரத்திற்கு செல்ல அப்போது பேருந்துகள் இல்லாத காரணத்தால், ஜி.எஸ்.டி சாலையில் நின்றிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி, அவரை மூன்று பேர் சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் பலரது வயிற்றிலும் புளியை கரைத்திருக்கிறது.  அந்த பெண்ணை கடத்திய அந்த மூன்று பேரும் கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோவில் பயணிக்கும்போதே அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவருக்கு வன்கொடுமையை ஏற்படுத்தியிருக்கின்றனர்.


கத்தி முனையில் வன்கொடுமை


அப்போது அந்த பெண் அழுது கூச்சலிட்டவாரே சென்றதை பார்த்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், காவல்துறையினர் அந்த ஆட்டோவை தேடி பிடிக்க முயற்சிக்கும் முன்னரே, அந்த பெண்ணை நெற்குன்றம் அருகே ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்டு அந்த மூன்று பேரும் அதே ஆட்டோவில் தப்பி சென்றுள்ளனர். பின்னர் போலீசார் அந்த பெண்ணை மீட்டு அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர். பின்னர் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை குற்றவாளிகளை தேடியது.


இருவர் கைது


இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தீவிரமாக போலீஸார் தேடி வருகின்றனர்


பாஜக கண்டனம்


இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘இப்படி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுவது என்பது தமிழ்நாட்டில் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது என்றும் எளிதில் கிடைக்கக் கூடியதாக போதைபொருள் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகு அரசு விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.






அண்ணா பல்கலை. விவகாரத்தை தொடர்ந்து கிளாம்பாக்கம்


அண்ணா பல்கலைகக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் நிலையில், இப்போது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடத்தி செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டிருப்பது என்பது பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


தமிழ்நாடு அரசும் காவல்துறையும் பெண்கள் பாதுகாப்பில் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.