சென்னையில் இருந்து சிங்கப்பூர் சுற்றுலா செல்ல வந்த, அமெரிக்காவில் படிக்கும் கல்லூரி மாணவர் சூட்கேஸில் இருந்த, துப்பாக்கி தோட்டா, சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிக் குண்டும், மாணவரும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


சென்னை விமான நிலையம் 


சென்னை சின்மயா நகரை சேர்ந்த மாணவரின் குடும்பத்தினர், அமெரிக்க நாட்டு குடியுரிமை பெற்றவர்கள். சென்னை சாலிகிராமம் அருகே சின்மயா நகரில் வசிப்பவர் கிஷோர். இவர் மனைவி, மகனுடன் அமெரிக்க குடியுரிமை பெற்று, அமெரிக்காவில் வசிக்கின்றனர். கிஷோரின் மகன் கவுரி (20),  அமெரிக்காவில் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.இந்த நிலையில் கிஷோர் குடும்பத்துடன், சென்னை சின்மயா நகரில் வசிக்கும் தனது தாயைப் பார்ப்பதற்காக, கடந்த 10  நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர்.


அபாயகரமான பொருள்


அதன் பின்பு நேற்று இரவு கிஷோர், மனைவி மகன், தாய் ஆகியோருடன் சிங்கப்பூர், சுற்றுலா செல்வதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர். இரவு 11:30 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இவர்கள் பயணிக்க திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள், அனைத்து பயணிகளின் உடைமைகளையும், ஸ்கேன் மூலம் பரிசோதிப்பது போல், கிஷோர் குடும்பத்தினர் உடைமைகளையும் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அப்போது கிஷோரின் மகன் கவுரி சூட்கேசில், அபாயகரமான பொருள் இருப்பதற்கான சைரன் ஒலித்தது.


துப்பாக்கி லைசென்ஸ்


இதையடுத்து பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள், கவுரியின் சூட்கேஸை தனியே எடுத்து வைத்து, பாதுகாப்பாக திறந்து பார்த்து சோதனையிட்டனர். சூட்கேசில் துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்தது. அந்த குண்டு வெடிக்கும் நிலையில் லைவ் ஆக இருந்தது. இதை அடுத்து துப்பாக்கி தோட்டாவை பறிமுதல் செய்தனர். அதோடு   கவுரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது கவுரி, தான் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடும் பயிற்சி எடுத்து வருவதாகவும், அதற்காக அமெரிக்காவில் துப்பாக்கி லைசென்ஸ் எடுத்து, துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அதில் பயன்படுத்த வைத்திருந்த குண்டுகளில் ஒன்று, தவறுதலாக இந்த சூட்கேஸில் இருந்திருக்கிறது. மேலும் 10 நாட்களுக்கு முன்பதாக நாங்கள் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த போது, இந்த சூட்கேஸ் தான் எடுத்து வந்தோம். ஆனால் அப்போது யாரும் கண்டுபிடிக்கவில்லை, என்று கூறினார்.


விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு


ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் கவுரியின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். இதை அடுத்து கிஷோர் தனது குடும்பத்தினர் அனைவரின் சிங்கப்பூர் பயணத்தையும்  ரத்து செய்து விட்டார். அதன் பின்பு கவுரியையும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தோட்டாவையும், பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் இன்று அதிகாலை ஒப்படைத்தனர்.  சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, கவுரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் அமெரிக்காவில் படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவரின் சூட்கேசுக்குள் துப்பாக்கி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.