சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். தாயை தொடர்ந்து தவறாக பேசியதால் கொலை செய்ததாக கணவர் பரபரப்பு வாக்குமூலம்.


கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் சாந்தகுமார் (46). இவர் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தில் பர்னீச்சர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி (40) மற்றும் நந்தினி (24) காவ்யா (20) என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் நந்தினி சென்னையில் ஐ.டி.கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இளைய மகள் காவ்யா எம்.சி.சி கல்லூரியில் பி.காம்., பயின்று வருகிறார். சாந்தகுமார் மற்றும் மனைவி பரமேஸ்வரி ஆகிய இருவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடு காரணமாக, சண்டையிட்டு வந்துள்ளனர்.


அம்மா கழுத்தில் வெட்டு  


வழக்கம் போல நேற்று காலை நந்தினி வேலைக்கும் காவ்யா கல்லூரிக்கும் சென்றுவிட்டனர். மாலை கல்லூரி முடிந்து காவ்யா வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது படுக்கையறையில், காவ்யாவின் அம்மா பரமேஸ்வரி கழுத்தில் வெட்டு காயங்களுடனும் மற்றும் அவரது அப்பா சாந்தகுமார் மயக்க நிலையிலும் கிடந்தனர். அதனை கண்ட காவ்யா அதிர்ச்சியில் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பரமேஸ்வரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர் . 


மேலும் சாந்தகுமார் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சாந்தகுமார் மற்றும் பரமேஸ்வரிக்கு கம்பியால் குத்தப்பட்ட காயங்கள் அதிகளவில் இருந்துள்ளன. அதிலும் குறிப்பாக பரமேஸ்வரிக்கு கழுத்து பகுதியில் கொலை செய்யும் நோக்கத்தில் வெறித்தனமாக குத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


போலீசார் தீவிர விசாரணை


கணவனை மட்டும் லேசாக தாக்கி உயிரோடு விட்டுவிட்டு அவரது மனைவியை மட்டும் கம்பியால் குத்தி கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால் கணவனே மனைவியை குத்தி கொன்றுவிட்டு நாடகமாடியிருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் இறந்து போன பரமேஸ்வரியின் கணவன் சாந்தகுமாரிடம் , கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் முருகேசன் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.


விசாரணையில் மனைவி பரமேஸ்வரி மாமியாரை அதாவது கணவன் சாந்தகுமாரின் அம்மாவை அடிக்கடி திட்டுவதாகவும், நேற்று மாலை மீண்டும் தனது அம்மாவை அவதூறாக பேசி திட்டியதால், ஆத்திரமடைந்து மனைவி என்றும் பார்க்காமல் இரும்பு கம்பியால் கழுத்து வயிறு என உடல்முழுவதும் குத்தி கொலை செய்ததாக முதற்க்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து சாந்தகுமாரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இது தொடர்பாக காவல்துறையை தொடர்பு கொண்டு கேட்டபோது : " ஆரம்ப கட்டத்தில் இருந்து இந்த கொலை தொடர்பாக கணவன் மீது சந்தேகம் இருந்து வந்தது. அடிப்படையில் முதற்கட்ட விசாரணை, கணவனிடம் இருந்து தொடங்கப்பட்டது. யாராவது வீட்டிற்கு வந்து சென்று இருக்கிறார்களா ? என்பது குறித்தும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, ஆய்வு மேற்கொண்டபோது சந்தேகம் ஏற்படவில்லை. இதன் அடிப்படையில் கணவர் சாந்தகுமாரை விசாரித்த போது , உண்மை தெரிய வந்தது என தெரிவித்தனர்.