தமிழ் திரை உலகில்  முக்கிய நடிகராக  நடிகர் விஜய் விளங்கி வருகிறார். விஜய்க்கு என்று தனி ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது. அதே போல தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர் மன்றங்களை உருவாக்கி , அதன் மூலம் சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தனது ரசிகர்களை போட்டியிட வைத்தார் விஜய். அதேபோல சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில், நடிகர் விஜயின் அலுவலகம் உள்ளது. இங்கு விஜய் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்களிடம் ஆலோசனை நடத்துவதற்காக இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 



 

நடிகர் விஜய்யின் அலுவலகத்தின் உட்பகுதிகள் புதுமைபடுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இங்கு வேலை செய்து வந்த பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பெயிண்டரான பிரபாகரன் (34), நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் தங்கி பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று சம்பளத்தை பெற்றுக்கொண்டு தன்னுடைய குடும்பத்தினரை காண பழைய வண்ணாரப்பேட்டைக்குச் சென்ற பிரபாகரன் நேற்று முந்தினம் இரவு 8 மணியளவில் குடிபோதையில் நடிகர் விஜய்யின் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.



 

அங்கிருந்த தனது நண்பர்களிடம் தனக்கு பசிப்பதாகவும், அதற்கு உணவு  வாங்குவதற்கு பணம்  தருமாறு கேட்டுள்ளார்.  இதனை அடுத்து அங்கு வேலை செய்து வந்த மேஸ்திரி ஒருவர் அவருக்கு நூறு ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளார்.இந்நிலையில் நேற்று அவருடன் வேலைபார்க்கும் சக வேலையாட்கள் வேலைக்கு வந்தபோது, அலுவலகத்தின் உட்புறமாக கையிலும் வாயிலும் பரோட்டாவுடன் பிரபாகரன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக அங்கிருந்தவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கானாத்தூர் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். 

 



 

தகவலறிந்து வந்த கானத்தூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பிரபாகரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் பரோட்டா சாப்பிட்டதில் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும், உடற்கூறு ஆய்வின் அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் விஜய்யின் வீட்டில் வேலைபார்த்து வந்த ஊழியர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.