சென்னை, விருகம்பாக்கம் அருகே அமைந்துள்ளது குமரன் காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் சொந்தமாக அந்த பகுதியில் ஸ்டூடியோ நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் வெளியூர் சென்றிருந்த இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூபாய் 2 கோடி மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்தனர்.
இதுதொடர்பாக, விருகம்பாக்கம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பாக சந்தோஷ்குமாருக்கு சொந்தமான ஸ்டூடியோவின் முன்னாள் ஊழியரான சுரேஷ் என்பவரிடம் விசாரிக்க அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் போலீசார் செல்ல திட்டமிட்டனர்.
காவல் ஆய்வாளர் சுமதி, பெண் காவலர் இலக்கியா ஆகிய இருவரும் விருகம்பாக்கம் பகுதியில் சுரேஷ் வீட்டைத் தேடிச்சென்றுள்ளனர். ஆனால், அப்போது, சுமதி மற்றும் இலக்கியா இருவரும் சுரேஷ் வீட்டிற்கு பதிலாக வேறு ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கே பொன்னுவேல்(69) மற்றும் சுகுமார் (52) ஆகிய இருவர் இருந்துள்ளனர். அப்போது, பொன்னுவேல் மற்றும் சுகுமார் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
வீடு மாறி வந்தது தெரியாத போலீசார் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, மதுபோதையில் இருந்த பொன்னுவேல் மற்றும் சுகுமார் இருவரும் யார் நீங்கள்? வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது ஏன்? என்று கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் தாங்கள் போலீஸ் என்று கூறியுள்ளனர். ஆனாலும், இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றியுள்ளது.
அப்போது, மதுபோதையில் இருந்த பொன்னுவேல், சுகுமார் இருவரும் இணைந்து பெண் போலீசார் சுமதி மற்றும் இலக்கியாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, போலீஸ் ஜீப்பில் அமர்ந்திருந்த சக போலீசாரை உதவிக்கு அழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சக போலீசார் பெண் காவல் ஆய்வாளர் சுமதி, பெண் காவலர் இலக்கியா இருவரையும் மீட்டனர். பின்னர், பொன்னுவேல் மற்றும் சுகுமார் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் காவல்நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். மதுபோதையில் பெண் போலீசாரை தாக்கிய பொன்னுவேல் மற்றும் சுகுமாரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். கொள்ளை வழக்கில் வீடு மாறி விசாரிக்க சென்று, மதுபோதையில் இருந்தவர்களால் பெண் போலீசார் தாக்குதலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Operation Durdant: “என் பக்கம் நியாயத்தை கேளுங்கள்; சிறையில் இருக்க விரும்பவில்லை” - பாடகர் சித்து கொலை குறித்து விவரிக்கும் தாதா
மேலும் படிக்க: ஆட்டோவில் செல்லும்போது விபத்து… காயமடைந்த நண்பரை காப்பாற்றாமல் பாதாள சாக்கடையில் வீசிச்சென்ற மூவர் கைது!